நெகேமியா – பாரமுள்ள மனிதன்

Rev. Robby J Mathew

07 February, 2023

Transcript of this message is also available in Hindi, English and Malayalam

நான் ஒரு மார்த்தோமா பாதிரியார். நான் இன்று இந்த ஊழியத்தில் இருப்பது கடவுளின் இடைப்பாடு என்று நம்புகிறேன்.  நான் 2012/2014 ஆம் ஆண்டு துபாயில் ஷார்ஜாவில் “இளைஞர் போதகர்” ஆக பணிபுரிய நியமிக்கப்பட்டேன். ஒரு நாள் வீடு சந்திப்பிற்கு சென்று வந்த பிறகு, என்னால் தூங்க முடியவில்லை. தொடர்ந்து 5 நிமிடம் கூட என்னால் உறங்க முடியவில்லை. நவம்பர் மாதம் முழுவதும் என் தூக்கமின்மை தொடர்ந்தது. “இயலாமை” எனக் குறியிடப்பட்டு, எனது ஊழியத்தைத் தொடர முடியாமல் போய்விடும் என்று நான் பயந்தேன். எந்த மருந்தும் உதவவில்லை. தூக்கமின்மையின் இந்த காலகட்டத்தில், நான் “விடுமுறை வேதமாக பள்ளி” நடத்த வேண்டியிருந்தது. ஆனால் எனது பலவீனத்தில் அவருடைய கிருபை பெரிதாய் இருந்தது, வேறு எந்த ஆண்டும் போலல்லாமல் VBS இன் கடைசி நாளில் 40 குழந்தைகள் முழு நேர ஊழியத்திற்காக ஒப்புக் கொடுத்தனர். ஆமென். வேறுஒரு சகோதரர் என்னை சந்தித்து, அவருடைய  ‘தூக்கமின்மை’க்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார். நான் அவருக்காக ஜெபித்தபோது, நான் என் தூக்கமின்மையிலிருந்து விடுவிக்கப்பட்டேன், அன்று இரவு என்னால் நன்றாக தூங்க முடிந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 21 நாட்கள் பகுதி நேர உபவாசம் என் மனைவியுடன் செய்த பிறகு, மார்தோமா தேவாலயத்தை விட்டு வெளியேறுவதற்கான எங்கள் முடிவை தேவன் உறுதிப்படுத்தினார், “மரித்தவர்களிடமிருந்து எழுந்து பரலோகத்திற்குச் செல்லுங்கள்” என்ற தரிசனத்தையும் கொடுத்தார்.  அவருக்கே மகிமை உண்டாவதாக.

நெகேமியாபாரமுள்ள மனிதன்

நெகேமியா 1:8,9 OT

8 – நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,

9 – நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேனென்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.

தேவன் சரியான நபரை சரியான நேரத்தில் பயன்படுத்துகிறார். சரியான நேரத்தில் எருசலேமின் மதில்களைக் கட்ட நெகேமியாவைத் தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு ஆசாரியனோ அல்லது தீர்க்கதரிசியோ அல்ல, ஆனால் அவர் பெர்சிய மன்னரின் பானபாத்திரக்காரராக நல்ல நிலையில் இருந்தார். தேவன் அவரை ஒரு பெரிய நோக்கத்திற்காக பயன்படுத்தினார். தேவன் சரியான நபரை சரியான நேரத்தில் பயன்படுத்துகிறார். ஒரு பானபாத்திரக்காரராக, அரண்மனையில் அவருக்கு நிறைய சலுகைகள் இருந்தன. அவர் நம்பிக்கைக்குரிய நபராக இருந்தார். ராஜாவுக்குக் கொடுப்பதற்கு முன், மதுவை முதலில் சுவைத்தவர் அவர். ராஜாவுக்குப் பின் இரண்டாவது இடத்தில் இருந்தார். அரசரின் ஆலோசகர்களில் இவரும் ஒருவர். தேவன் தம் மக்களுக்கு ஆறுதல் அளிக்க அத்தகைய முக்கியமான நபரை பயன்படுத்துகிறார். நெகேமியாவின் பெயர் ” ஆறுதல் அளிக்கும் தேவன்” என்று பொருள். நீங்கள் ஒரு நல்ல உலக வேலையில் இருக்கலாம், ஆனால் துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்க தேவன் உங்களைப் பயன்படுத்துகிறார். கடவுளுடைய மக்கள் பாபிலோனுக்கு  நாடுகடத்தப்பட்டனர். மீண்டும் எருசலேமுக்குத் திரும்புவது எளிதான காரியம் அல்ல. எருசலேம் இடிபாடுகளில் கிடந்தது. 70 வருட சிறையிருப்புக்குப் பிறகு அவர்கள் எருசலேமுக்குத் திரும்புவார்கள் என்று கர்த்தர் வாக்கு அளித்திருக்கிறார். 70 வருட சிறையிருப்புக்குப் பிறகு, ஒரு புறஜாதி அரசன் மூலம் தேவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். அவர்கள் ஒரு புறஜாதி அரசரான ‘நேபுகாத்நேச்சார்’ என்பவரால் நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் கோரேசு என்ற மற்றொரு புறஜாதி அரசனால் திரும்பக் கொண்டுவரப்பட்டனர்.

நெகேமியா 1:3 OT

3 அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் மீந்திருக்கிறவர்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.

மீந்திருக்கிறவர்கள்

பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்ட 20 அல்லது 30 லட்சம் மக்களில், சுமார் 50 ஆயிரம் பேர் மட்டுமே எருசலேமுக்குத் திரும்பினர். அதாவது 2% மக்கள் மாத்திரமே. மீதமுள்ள மக்கள் இன்னும் பாபிலோனில் இருந்தனர். அவர்கள் இன்னும் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள், எருசலேமுக்குத் திரும்ப விரும்பவில்லை. சிறைபிடிக்கப்பட்டவர்களின் சிறிய சதவீதம் அல்லது மீந்திருக்கிறவர்கள் எருசலேமுக்குத் திரும்பினர். நம் தேவன் மீந்திருக்கிறவர்களைப் பற்றி அக்கறையுள்ள தேவன். மீந்திருக்கிறவர்களுக்கு உதவ சரியான நேரத்தில் சரியான தலைவரை எழுப்பினார். இந்த மீந்திருக்கிறவர்கள் எருசலேமில் துன்பப்பட்டு கடினமான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர், உடைந்த மதில்கள் மற்றும் எரிக்கப்பட்ட மதில் வாசல்கள்  காரணமாக, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு இல்லை. அவர்கள் மிகுந்த தீங்கிலும் நிந்தையிலும் வாழ்ந்து வந்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு இப்போது இரண்டு வழிகள் இருந்தன, ஒன்று எருசலேமுக்குத் திரும்புவது அல்லது பாபிலோனிலேயே தொடர்வது. நாம் இப்போது எங்கே இருக்கிறோம்? கவர்ச்சிகரமான சிறையிருப்பிலா? அல்லது பாழடைந்த எருசலேமிலா? எங்கே தங்க விரும்புகிறீர்கள்? சௌகரியத்தையும் ஆடம்பரத்தையும் விட்டுவிட்டு போராட்ட வாழ்க்கையாகிய எருசலேமுக்குத் திரும்ப வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

ரூத்தின் புத்தகத்தில் நாம் பார்க்கிறோம்; எலிமெலேக்கும் அவனுடைய குடும்பத்தாரும் பஞ்சத்தின் காரணமாக எருசலேமிலிருந்து மோவாபுக்குச் செல்கிறார்கள். எருசலேம் என்றால் அப்பத்தின் நகரம் என்று பொருள். அவர்கள் அப்பத்தின் நகரத்திலிருந்து அப்பம் தேடி மோவாப் என்கிற சபிக்கப்பட்ட இடத்திற்குச் செல்கிறார்கள். தனிப்பட்ட இழப்புக்குப் பிறகு அவர்கள் அதை உணர்ந்ததும், மீண்டும் எருசலேமுக்கு வர முடிவு செய்கிறார்கள்.

நெகேமியா 1:4 OT

4 – இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:

மனதுருக்கம் 

அரண்மனையில் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நெகேமியா, தன் மக்கள் பாழடைந்த நிலையில் வாழ்வதைக் கேள்விப்பட்டபோது, கண்ணீர் விட்டு அழுதார். அவர் தனது தேசத்தைப் பற்றி கவலையும் பாரமும் கொண்டிருந்தார். தேவன் தம்முடைய மக்களுக்கு உதவ இதயங்களில் பாரம் இருப்பவரைப் பயன்படுத்துகிறார். நெகேமியாவுக்கு மனதுருக்கம் இருந்தது. மனதுருக்கம் என்பது அனுதாபம் அல்ல. மக்கள் துன்பப்படுவதையும், பசியோடும், இழந்து தவிப்பதையும் கண்ட இயேசு மனது உருகினார். எபிரேய மொழியில் “ரஹாம்” என்ற வார்த்தை உள்ளது – ஒரு பெண்ணின் கருப்பையை குறிக்கும். ஒரு தாய் தன் வயிற்றில் உள்ள குழந்தையைப் பற்றி குறை கூறுவதில்லை. அவள் குழந்தையை உள்ளடக்குகிறாள். இரக்கம் என்பது எந்த ஜாதியையும் மதத்தையும் சார்ந்தது அல்ல, அது அனைவரையும் உள்ளடக்கியது. “ஆண்டவரே, எனக்கு மனதுருக்கத்தைத் தாரும்” என்று ஜெபிப்போம்.

ஜெபம் அனைத்தையும் மாற்றும்

நெகேமியா ராஜாவிடம் ஆலோசனை கேட்க அவசரப்படாமல், “ராஜாதி ராஜா”விடம் ஆலோசனை கேட்கிறார். அவர் எசேக்கியேலின் வரலாற்றை நன்கு அறிந்திருந்தார், அவர் மதில்களைக் கட்ட முயற்சித்தபோது, அது எதிரிகளால் வேண்டுமென்றே முறியடிக்கப்பட்டது. எருசலேமின் மதிலைக் கட்டுவது ராஜாவின் செல்வாக்கால் சாத்தியமில்லை, ஆனால் எல்லாம் வல்ல கர்த்தரால் மட்டுமே சாத்தியம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் திறப்பதை யாரும் அடைக்க முடியாது.

நெகேமியா 1:1 & 2:1 இல் கிஸ்லேயு மாதம் முதல் நிசான் மாதம் வரை அதாவது 4 மாதங்கள், எருசலேமின் மதில்களைக் கட்டுவதற்கு இஸ்ரவேலுக்குச் செல்ல அனுமதிக்காகக் காத்திருந்து நெகேமியா ஜெபித்தார் என்று வாசிக்கிறோம். கர்த்தருடைய சந்நிதியில் காத்திருப்பவர்களுக்கு, உடைந்த மதில்களைக் திரும்ப கட்டும் ஆற்றலை அவர் கொடுக்கிறார்.

டி எல் ஆஸ்போர்ன் என்னும் ஒரு அமெரிக்க டெலிவாஞ்சலிஸ்ட் இருந்தார். கர்த்தர் அவரை ஒரு வருடத்திற்கு ஒரு நாளைக்கு 23 மணிநேரம் ஜெபிக்கும்படி சொன்னார். ஒரு வருடத்திற்குப் பிறகு, சுவிசேஷகர் ஓரல் ராபர்ட்ஸ் அவரை ஒரு கூட்டத்தில் “இதோ தேவன் முன்னிலையில் 1 வருடம் கழித்த ஒருவர்” என்று அழைத்தார். அவர் கூட்டத்தின் வழியாக நடந்து செல்லும்போதே, ​​அற்புதங்கள் நிகழ்ந்தன; மக்கள் குணமடைந்தனர்.

உடன்படிக்கையை நிறைவேற்றும் தேவன்

நெகேமியா 1:5 OT

5 – பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,

தேவனைப் பற்றிய நெகேமியாவின் புரிதல் மிகவும் தெளிவாக இருந்தது. எங்கள் தேவன் அற்புதமானவர்; பெரியவர். அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு தன உடவபடிக்கையை நிறைவேற்றுபவர் நம் தேவன்.

ஏசாயா 45: 1,2 OT 

1 – கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:

2 – நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.

பாபிலோனியப் பேரரசு மிகவும் பலமானதாக இருந்தபோதிலும், தேவன் இந்த சாம்ராஜ்யத்திற்குள் நுழைவதற்கும், தம் மக்களை சிறையிருப்பிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கும் இந்த புறஜாதி ராஜாவான கோரேசை பயன்படுத்தினார், ஏனெனில் அவர் உடன்படிக்கையைக் காக்கும் தேவன். ஆமென்.

மொழிபெயர்த்தவர் – Sis. Jebah Daniel.