வேதாகம பகுதி: மத்தேயு 9:35-38
35.பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
36.அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
37.தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்;
38.ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு,அவர்களின் தேவையை உணர்ந்து, அவர்கள் மீது இரக்கம் கொண்டார். அறுவடைகள் ஏராளமாக இருப்பதை உணர்ந்து அவர் செய்ய வேண்டிய வேலையைப் பார்த்தார். அவர்கள் பல நகரங்களிலும் பிற இடங்களிலும் சிதறிக் கிடப்பதைக் கண்டார், அங்கு நோய்வாய்ப்பட்டவர்கள் குணமடைய வேண்டும், ஆனால் அவரால் உடல் ரீதியாக எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்று அறிந்தார்.
மத்தேயு 18: 10-14
10.இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11.மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.
12.உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?
13அவன் அதைக்கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப் பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14.இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
தேவையில் இருப்பவர்களை நாம் இகழ்ந்து விடக்கூடாது என்று இயேசு சொன்னார். அவர் சிறியவர்கள், ஏழைகள் மற்றும் தூரம் போனவர்கள் பற்றி குறிப்பிடுகிறார். பரலோகத்தில் அவர்களுக்காக நியமிக்கப்பட்ட தூதர்கள் உள்ளனர் .காணாமல் போன ஆடுகளின் உவமையுடன் அவற்றை ஒப்பிட்டு, ஒரு ஆடு மந்தையை விட்டுத் தொலைந்து போனாலும், மேய்ப்பன் மற்ற 99 ஆடுகளையும் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு, காணாமல் போன ஒரே ஒரு ஆட்டைத் தேடிச் செல்வான் என்று கூறினார்.அதேபோல, பூமியில் உதவி தேவைப்படும் மிகச்சிறிய ஒருவரைக்கூட இயேசு கவனித்துக்கொள்வார் என்பதாகும்.
2 நாளாகமம் 16:9 (அ)
“தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது”;
கர்த்தருடைய இருதயமும், அவருடைய கண்களும் எப்பொழுதும் தேவைப்படுகிறவர்களை தேடிக்கொண்டிருக்கிறது.
யோவான் 5:1-9
1.இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.
2.எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.
3.அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
4.ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
5.முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
6.படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
7.அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
8.இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9.உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.
எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஒரு குளம் இருந்தது. சந்தையிலிருந்து பலியிடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆடுகளின் நுழைவு வாயில் அது. ஆடுகளை கூட அந்த குளத்தில் கழுவினார்கள். பின்னர் இது “பெதஸ்தா” என்று அழைக்கப்பட்டது, அதாவது ‘கிருபையின் வீடு’ அல்லது இரக்கத்தின் வீடு’என்று அர்த்தம். தேவனின் தூதன் இறங்கி வந்து குளத்தின் தண்ணீரைக் கலக்கும்போது, முதலில் குளத்தின் நீரில் இறங்குபவர் அனைத்து நோய் மற்றும் வியாதிகளிலிருந்து சுத்தப்படுத்தப்படுவார் என்று நம்பப்பட்டது. எனவே, அவர்களில் ஏராளமானோர் குளக்கரையில் தேவன் அனுப்பும் வானதூதர் மூலம் தண்ணீர் கிளப்பப்படும் வரை காத்திருந்தனர். அவர்கள் உடல்நலக்குறைவு மற்றும் இயலாமையால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, அவர்கள் ஏழைகளாகவும் இருந்தனர்,அவர்களால் மருத்துவரிடம் செல்லவும் முடியவில்லை.
இங்கே கேட்கப்பட வேண்டிய கேள்வி, ‘தேவன் ஏன் தண்ணீரைக் கலக்க ஒரு தூதனை அனுப்பினார்?
ஆட்டு வாசலைச் சுற்றி ஆசாரியர்கள், கோவில் பணியாளர்கள், ஜெப ஆலயத் தலைவர்கள் மற்றும் திறமையான பிற மனிதர்கள் இருந்தனர், அவர்கள் தேவனுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறினர். ஆனால் அவர்களால் பெதஸ்தாவின் நீர் வழியாக குணப்படுத்த முடியவில்லை. அவர்களில் எவரேனும் பெதஸ்தாவின் தண்ணீரைக் கலக்கும்போது, அது கலங்கி அதன் மீது குணப்படுத்தும் சக்தி வரவில்லை. அதனால் தேவன் ஒரு தூதனை அனுப்பி தண்ணீரைக் கலக்க வேண்டியிருந்தது. கேட்கப்பட்ட கேள்விக்கு எளிமையான பதில் என்னவென்றால், உயர்ந்த மற்றும் வலிமையானவர்கள் யாரும் அவர்களைக் காப்பாற்ற இயலவில்லை. ஏனெனில், அவர்கள் நோயினாலும், ஊனத்தினாலும் மட்டுமின்றி, இதே சமூகத்தால் இகழ்ந்து ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். அங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட இந்த தேவாலயத்தின் தலைவர்களை அணுகவில்லை, ஏனென்றால் அவர்களால் குணப்படுத்த முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.
சபை குணப்படுத்துவதை நிறுத்தினால், ஏழைகளும் இயலாதவர்களும் ஆதரவுக்கு எங்கே செல்வார்கள்? சபையாக நமது பொறுப்பை நாம் உணர வேண்டும்.
யோவான் 10:10
“திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்”.
பிசாசு கொல்லவும் அழிக்கவும் வருகிறான். அவன் முழுமையாக திருடவோ, ஊழல் செய்வதோ இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறான். முதலில் அவன் நம் வாழ்வின் சிறிய பகுதியை தாக்குகிறான். அதனால்தான் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் பிற நோய்கள் குறுகிய காலங்கள் நம்மிடம் உள்ளன. நமது முக்கிய நோக்கத்திலிருந்து நம்மை விலக்கி வைப்பதற்காக, சிறிய இடைவெளியில் நோய்கள் மற்றும் வியாதிகளால் நம்மை ஆக்கிரமிக்க வைக்கிறான். பிசாசு அப்படித்தான் செயல்படுகிறான். நமது ஆற்றல், செயல்திறன், பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருடுகிறான். ஆனால், நம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், குணப்படுத்தவும், நம்மை முழுமையாக மீட்டெடுக்கவும் நம் தேவன் விரும்புகிறார். ‘முழுமையாக’ என்று நாம் வாசிக்கும் வசனத்தில் எழுதியிருப்பது போல, நமக்கு எல்லாமே நிறைவாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
லூக்கா 13: 10-17
10.ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம் பண்ணிக்கொண்டிருந்தார்.
11.அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
12.இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
13.அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
14.இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
15.கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
16.இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
17.அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.
அந்த நாட்களில் சமுதாயத்தில் தலைவர்களால் பல கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் போடப்பட்டு இருந்தன. ஓய்வுநாள் கட்டுப்பாடுகளும் அவைகளில் ஒன்றாகும். ஓய்வுநாளில் செய்ய வேண்டிய அனைத்திலும் சட்டப் போதகர்களுக்கு விதிகள் இருந்தன. ஒரு ஓய்வுநாளில் நிமிரக்கூடாத கூனியாகிய ஒரு ஸ்திரியை இயேசு குணப்படுத்தியபோது, ஜெப ஆலயத் தலைவர்களும் நியாயப்பிரமாண ஆசிரியர்களும் கோபமடைந்தனர். இயேசு அந்தப் பெண்ணை ஆபிரகாமின் மகள் என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கிறோம். ஜெப ஆலயத் தலைவர்கள் தேடும் கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் அவர் அந்த ஸ்திரீயை ‘விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாமின் குமாரத்தி’ என்று மேற்கோள் காட்டுகிறார்.
இயேசு இன்று வருவார் என்றால், அவர் இந்த உலகத்தில் எதைத் தேடுவார்? அவர் இங்குள்ள அழகான பொருட்களையும் மக்களையும் பார்ப்பாரா? அல்லது, ஆழ்ந்த ஆன்மீக மற்றும் உடல் தேவை உள்ளவர்களை அவர் தேடுவாரா?, உங்கள் உடல், உங்கள் ஆவி, உங்கள் உணர்ச்சிகள் போன்றவற்றில் நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம். ஆம், இயேசு இந்த பிரச்சினைகளை நம்மில் குணப்படுத்த வல்லவர். இயேசு நம்மை மறக்கவில்லை, அந்த விசுவாசத்தின் ஒளி நம் மீது இருக்கட்டும்.
யோவான் 5:5-10
5.முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
6.படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
7.அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
8.இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9.உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.
10.ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.
ஒரு மனுஷன் முப்பத்தெட்டு ஆண்டுகள் நடக்கமுடியாதவர். முப்பத்தெட்டு வருடம் என்பது நீண்ட காலமாகும். குளக்கரையில் இருந்த மனிதரிடம் கேட்டது போல், நமது உடல் நலக்குறைவு குணமாக வேண்டுமா என்று இயேசு நம்மிடம் கேட்டால், அதுவும் முப்பத்தெட்டு வருடங்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிறகு, நாம் என்ன பதில் சொல்லியிருப்போம்? இவ்வளவு உற்சாகமாக இருந்திருப்போமா? நம்மில் பெரும்பாலோர் சொல்லியிருப்போம், இவ்வளவு வருடங்கள் கடந்துவிட்ட பிறகு இப்போது ஏன் குணப்படுத்த வேண்டும்? நாங்கள் நோய் மற்றும் இயலாமை நிலையுடன் வாழ பழகிவிட்டோம். நோய்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து குறைபாடுகளையும் தாங்கிக்கொண்டிருப்போம். ஆனால் பெதஸ்தா குளத்தில் இந்த நடக்கமுடியாத மனிதன் அப்படி சொல்லவில்லை. இயேசு அவனுடைய விசுவாசத்தைக் கண்டு, “எழுந்திரு’ என்ற சொன்னவுடனே அவன் தன் பாயை எடுத்துக்கொண்டு நடந்தான். அந்த மனிதன் தன் பாயின் நினைவுடன் இருந்தான், அதனால் தன் பாயை எடுத்து சென்றான் . 38 வருடங்கள் அதைத் தன்னிடம் வைத்திருந்ததால், அது அவன் வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. இயேசு அந்த ஒரு மனிதனுக்காக மட்டும் பெதஸ்தாவின் குளத்திற்குச் சென்றார்.அந்த ஒரே ஒரு ஆத்துமா மீது அவர் இரக்கம் கொண்டார்.அவர் அக்கறை காட்டுகிறார்,அவர் குணப்படுத்துகிறார் என்பதை நாம் இதன் மூலம் உணர்கிறோம்.அவர் உங்களையும் குணப்படுத்துவார், இயேசுவால் செய்ய முடியாதது எதுவுமில்லை.
1 பேதுரு 2:24
“நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்”.
இயேசுவே நம் பாவங்களைச் சுமந்தார். ‘அவரே’ என்பது குறிப்பிடத்தக்க மற்றும் ஆற்றல்வாய்ந்த வார்த்தை. அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம். இயேசு ஏற்கனவே நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்த்தத்தால், கடந்த காலத்தைப் பற்றி நாம் ஏன் இன்னும் கவலைப்படுகிறோம்?
ஏசாயா 43: 18-19
18.முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.
19.இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
நாம் கடந்த காலத்தை, முன்னாள் விஷயங்களை மறப்பது கடினம். இயேசுவைப் பின்பற்றி, முந்தைய விஷயங்களை மறந்து, ஒரு புதிய நாளையும் எதிர்காலத்தையும் எதிர்பார்த்து முன்னேறுவோம். நாம் கொண்டு வந்த பாரங்களை மறந்து விடுவோம், தேவன் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறார். அவர் வனாந்தரத்தில் ஒரு புதிய வழி மற்றும் தரிசு நிலத்தில் ஓடைகள் உண்டாக செய்கிறார். புத்தாண்டில் புதிய விஷயங்களை எதிர்பார்ப்போம்.
ஏசாயா 61: 2-3
2.கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,
3.சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
கர்த்தர் தம்முடைய நீதியன் வெளிப்பாட்டிற்காக ஒரு நடவு நடுகிறார். அது நீதியின் கருவேலமரங்கள். அவர் தமது மகிமையை மீட்டெடுப்பார். நம்முடைய சுகப்படுத்துதலின் மூலம் அவர் அதைச் செய்வார். திருச்சபை பெதஸ்தாவாக மாற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், அங்கு ஆதரவற்றவர்கள் குணமடைவார்கள். ஆமென்.மொழிபெயர்த்தவர் : பொன்சிபா.வி