உங்கள் விசுவாசத்தை ஆராய்ந்து அறியுங்கள்
நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்(II கொரிந்தியர் 13:5)
அப்போஸ்தலன் பவுல் இந்த வார்த்தைகளை கொரிந்துவில் உள்ள விசுவாசிகளுக்கு எழுதுகிறார், அவிசுவாசிகளுக்கு அல்ல. இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் தேவனின் பிள்ளைகளுக்கு உரையாற்றப்பட்டது என்று தெளிவாகிறது. நம்முடைய விசுவாசத்தை தேவனுடைய வார்த்தையுடன் இணைத்து வைக்க நாம் அதை தொடர்ந்து ஆராய வேண்டும்.
தங்கள் விசுவாசத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று சீஷர்கள் இயேசுவிடம் கேட்டபோது, இயேசு அதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் அவர் உண்மையான விசுவாசத்துடன் பதிலளித்தார். (லூக்கா 17:5) ஒருவரின் விசுவாசத்தை அதிகரிக்க உடனடி தந்திரமோ, சஞ்சீவியோ இல்லை. பல்வேறு போராட்டங்கள், சோதனைகள் மற்றும் உபத்திரவங்களை நாம் கடந்து செல்லும்போது மட்டுமே அதை அதிகரிக்க முடியும். உண்மையான கிறிஸ்தவ நம்பிக்கைக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை.
நமது விசுவாசத்தை உருவாக்குவது
ஜிம்மிற்குச் செல்வதன் மூலம் நம் தசைகளை வளர்ப்பது போல, நம் விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளவும், அதை வலுப்படுத்தவும் வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் உபத்திரவங்களைப் பயன்படுத்த வேண்டும். தேவனுடனான நம் உறவில் நாம் வளர வேண்டும் என்றால், நம் விசுவாசத்தை நடைமுறையில் கட்டியெழுப்ப வேண்டும்.
2 தீமோத்தேயு 1:12ல் அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
மேற்கூறியவற்றுக்கு எதிராக, மற்றொரு வகை விண்ணப்பத்தை பாருங்கள். ஆதியாகமம் 28:20ல். இங்கே யாக்கோபு தேவனிடம் நிபந்தனைகளை முன்வைக்கிறார். வாழ்வின் இறுதி வரை அவர் இருப்பார் என்று தேவன் அவருக்கு உறுதியளித்திருந்தாலும், யாக்கோபு தனது நிபந்தனைகளை தேவனிடம் நிரூபிக்க விரும்புகிறார். நாம் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வந்தவுடன், எல்லாமே தோட்டப் பாதை வாழ்க்கையாக இருக்கும் என்று மக்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை!
யோபு 7:17-18ல்,மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும் அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கு நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?”
தவறான தீர்க்கதரிசனங்கள்
தவறான தீர்க்கதரிசனம் மற்றும் தவறான போதனை உள்ளது. இவை இரண்டையும் நாம் பகுத்தறிய வேண்டும். இன்று எத்தனையோ ஊடகங்கள் பல விதமான செய்திகளை,போதனைகளை பரப்பி வருகின்றன.அதை நாம் பகுத்தறிய வேண்டும்.இப்போதெல்லாம் சபையின் மனநிலையை உற்சாகப்படுத்த தீர்க்கதரிசியின் சொந்த கற்பனையில் இருந்து பல தீர்க்கதரிசன அறிக்கைகள் கூறப்படுகின்றன.
எரேமியா 29:11 என்பது பெரும்பாலும் தவறான சூழலில் இருந்து மேற்கோள் காட்டப்படும் ஒரு பொதுவான வசனம். இஸ்ரவேல் பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டு இருந்தது மற்றும் பல தீர்க்கதரிசிகள் அவர்கள் சுதந்திரம் மற்றும் ‘வளமான எதிர்காலத்தை’ பார்ப்பார்கள் என்று கணித்துள்ளனர். ஆனால் எரேமியா, 23:16-ல், அந்த தீர்க்கதரிசன செய்தி தேவனிடமிருந்து வந்தது இல்லை என்று தேவனே கூறுகிறார்.
ஏசாயா 55:8-9 ல் என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
காத்திருத்தல் மற்றும் வேலை
தேவனின் சத்தத்தில் நம்பிக்கை வைப்பது தான் விசுவாசம். எனவே, நாம் தேவனுடைய சத்தம் கேட்க காத்திருக்க வேண்டும்.ஆனால் காத்திருக்கும் நேரத்தில், வேலைக்குச் செல்லுவோம், வீட்டைக் கட்டுவோம், குடும்பத்தின் அனலை மூட்டுவோம், தேவன் நம்மை அழைத்துச் சென்ற நகரங்களுக்காக ஜெபிக்கவும், சகிப்புத்தன்மையைக் காத்துக்கொள்வோம்.
தேவனின் திட்டம் மற்றும் நோக்கம்
தேவன் இஸ்ரவேலர்களை 40 வருடங்கள் நீண்ட பாதையில் அழைத்துச் சென்றார். அவருக்கு ஒரு நோக்கமும் திட்டமும் இருந்தது. அவர்கள் மனத்தாழ்மையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குணாதிசயங்களையும் வாழ்க்கை முறையையும் மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். நம்முடைய உண்மையான விசுவாசத்தைக் கட்டியெழுப்ப தேவன் சோதனைகளையும் பாடுகளையும் அனுமதிக்கிறார். யோசேப்பு தனது சகோதரர்களையும் குடும்பங்களையும் விடுவிப்பதற்காக எப்படி ஒரு செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதை பவுல் தீமோத்தேயுவிடம் சுட்டி காட்டுகிறார். 23 ஆம் சங்கீதத்தில் இந்தச் சிந்தனையைத்தான் வாசிக்கிறோம். ‘மரண இருளில் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்’ என்று.
கடந்து செல்வது முக்கியம்
இந்த எல்லா சூழ்நிலைகளிலும் நாம் தங்கிவிடாமல், நாம் மேற்கொள் வேண்டும். எனவே, ‘என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை,என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை என்று அழுவதற்குப் பதிலாக,நாம் என்ன செய்கிறோம் என்பதைச் தெரிந்துக்கொள்ள தேவனிடம் கேட்போம். கொரோனாவின் போது தேவன் நம்மை எவ்வாறு சோதனையின் மூலம் அழைத்துச் சென்றார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். அவர் தனது திட்டத்தின்படி நம்மை அழைத்துச் செல்கிறார்.சங்கீதம் 11:5 யும் இதே கருத்தை ஆதரிக்கிறது.
சோதனையை எதிர்கொள்ளுங்கள்
யாக்கோபு 1:2ல், நாம் புரிந்துகொள்கிறோம், ‘பரீட்சைகளும், சோதனைகளும் ஊடுருவும் நபர்களைப் போல வரும்போது, ஊடுருவும் நபர்களை சுடாதீர்கள் அல்லது கொல்லாதீர்கள். ஆனால் அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள். சோதனைகள் மற்றும் பரீட்சையின் போது, சோதனையை எவ்வாறு எதிர்கொள்வது என்று தேவனிடம் கேளுங்கள். அவர் உங்களை வழிநடத்துவார். எல்லா மனிதர்களையும் மன்னிக்க அவர் உங்களுக்கு உதவுவார், பரத்திலிந்து வரும் எல்லா ஞானத்திற்காகவும் வேண்டுங்கள். ரோமர் 8:29, 2 பேதுரு 2:4, எபிரேயர் 12:10 இந்த வசனங்கள் அனைத்தும் தேவனுடைய குமாரனைப் போல நாம் எப்படி முதிர்ச்சியடைய முடியும் என்பதைக் காட்டுகின்றன. இது எளிதான காரியம் அல்ல. ஆனால் நாம் நன்றி மற்றும் துதி செய்யும்போது, நம் வாழ்க்கையில் அவர் செய்ததை ஒப்புக்கொள்கிறோம், அவருடைய விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறோம்.
எப்பொழுதும் தேவனை துதியுங்கள்
ஆசீர்வாதம் வருவதற்கு முன்பே ஆபிரகாம் தேவனை புகழ்ந்தார்.பேதுருவும் சீலாவும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பே துதித்து பாடத் தொடங்கினர்.எலிசா தனது வேலைக்காரனின் கண்களைத் திறக்கும்படி தேவனிடம் ஜெபித்தார், தேவன் அதைச் செய்தார். கர்த்தரில் நம்பிக்கை வைத்து, உண்மையான விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள். இதுவரை உங்களைக் கவனித்துக் கொண்டவர்,இன்னமும் முன்னோக்கி அழைத்துச் செல்வார். எல்லா சோதனை நேரங்களிலும், தேவனை துதியுங்கள். அவர் நம்மை முதிர்ச்சியடையச் செய்து, உண்மையான விசுவாசத்துடன் நம் உள்ளான மனிதனைப் பலப்படுத்துவார்.அடுத்த தலைமுறைக்கு அதுவே ஒரு மரபுவழியாக நம்மைக் கடத்துவதற்கு அவர் உதவுவார் ஆமென்.
மொழிபெயர்த்தவர்: பொன்சிபா.வி