வெற்றிகரமான சிலுவைப்பாடுகள்

House of Prayer
May 22 · 1 minute read

                                                       போதகர். சாம் வர்கீஸ்

உலகெங்கிலும் உள்ள பல கிறிஸ்தவர்கள் புனித வெள்ளிகிழமைகளில் மரச்சிலுவையைச் சுமந்துகொண்டு தேவாலய தொழுகைகளில் பங்குபெறுவார்கள். ஆனால் நாம் நம் வாழ்வில் சிலுவையை சுமந்துக்கொண்டு செல்ல வேண்டும். நம் சிலுவையை எடுத்துக்கொண்டு நடக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை சிந்திப்போம். மத்தேயு 10:37-39 தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, என்னிலும் அதிகமாக தங்கப்பனையோ தாய்யையோ நேசிப்பவன் எனக்கு பாத்திரன் அல்ல” என்று இயேசு சொல்லுகிறார். ஆனால் தாயையோ தகப்பனையோ கனம்பண்ணகூடாதென்றோ உபசரிக்கக்கூடாதென்றோ இயேசு சொல்லவில்லை, மாறாக இயேசுவை தான் எல்லாரிலும் அதிகமாக நேசிக்க வேண்டும் என்கிறார். அடுத்ததாக மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல என்கிறார். இப்போதைய காலகட்டத்தில் ஒன்றோ இரண்டோ குழந்தைகள் தான் குடும்பத்தில் பிறக்கின்றனர், ஆகையால் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அளவுக்கடந்த பாசம் வைக்கிறார்கள். நம் பிள்ளைகள் நமக்கு விக்கிரகங்களாக மாறிவிட்டனர். மத்தேயு 10:38 ஆம் வசனத்தில் தன் சிலுவையை எடுத்து எனக்கு பின் செல்லாதவன் எனக்கு பாத்திரனல்ல” என்று வேதம் கூறுகிறது. நாம் இயேசுவின் சிலுவையையல்ல, அவனவன் தன் சிலுவையை எடுத்து இயேசுவை பின்பற்ற வேண்டும். நம் எல்லோருக்கும் ஒரு சிலுவை கொடுக்கப்பட்டுள்ளது, சிலர் என் கணவன் அல்லது என் மனைவி எனக்கு சிலுவை என்று கூறுவர் ஆனால் அவர்கள் தேவன் தந்த ஆசீர்வாதமாகும். 39 ஆம் வசனத்தில், தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான். என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்” என்று எழுதப்பட்டுள்ளது. நாம் இன்று நம் ஜீவனை இழக்க தயாராக இல்லை. நாம் அனுதினமும் பாடுபட்டு நமக்கொரு அடையாளத்தை உருவாக்க ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வேதம் “நாளைய தினத்தை குறித்து கவலை வேண்டாம் நாளைய தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும் என்று கூறுகிறது. இயேசுவின் நிமித்தம் நாம் நமது ஜீவனை இழந்திருக்கிறோமா? சற்று சிந்திப்போம். இதே காரியத்தை லூக்கா 14:26-27 ல் குறிப்பிடுகிறார், யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” என்கிறார். வேதத்தின் நான்கு சுவிசேஷ பகுதிகளையும் நாம் ஒப்பிட்டு வாசிக்க வேண்டும். ஏனென்றால் ஒரு சுவிசேஷ பகுதியில் விடுபட்டுள்ள செய்தி வேறு சுவிசேஷ பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு லூக்கா “மனைவியையும் சகோதரனையும் சகோதரிகளையும் என்று இணைத்து கூறியுள்ளார். நாம் இயேசுவிடம் வந்ததினால் நம் சகோதரனையும் சகோதரிகளையும் இழந்திருக்கிறோமா? என் சகோதரன் எனக்கு வரவேண்டிய வீதத்தை தரவில்லை என்று நம்மில் பலர் நம் சகோதர சகோதரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுண்டு. லூக்கா மேலும் சொல்லுகிறார் “தன் சொந்த ஜீவனையும் பகைக்காதிருக்கிறவன் பத்திரனல்ல” என்று. இங்கு “பகைப்பது” என்பது இயேசுவைவிட மற்றவரை அதிகமாக நேசிக்காதிருப்பதாகும். தன் சொந்த ஜீவனை பகைப்பது என்பது நாம் நம்மையே இயேசுவைவிட அதிகமாக நேசிக்காமல் இருக்க வேண்டும் என்பதாகும். “மனுஷர் தற்பிரியராய்” இருப்பார்கள் என்பது கடைசிகாலத்தின் ஒரு அடையாளமாகும். தன் ஜீவனை வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” என்று இயேசு கூறுகிறார். வேதத்தில் நாம் பார்க்கும்போது, மத்தேயு வரி வசூலிப்பவராக காணப்பட்டார், ஆனால் இயேசு தன்னை பின்பற்றி வா என்று சொன்னபோது தன் தொழிலை விட்டு விட்டு இயேசுவின் பின் சென்றார். அதேபோல பேதுரு தன் மீன்பிடி தொழிலை விட்டு இயேசுவின் சீஷனாக சென்றார். இந்த வேத பகுதியில் நாம் பார்க்கும்போது தன் ஜீவனை விட்டுவிட்டு தன் சிலுவையை எடுத்துகொண்டு என்னை பின்பற்றி வரக்கடவன் என்று இயேசு கூறியிருக்கிறார். இங்கு இரெண்டு காரியங்களை இயேசு நமக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறார்.

1)இயேசுவை பின்பற்ற வேண்டும் 

2) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்ற வேண்டும் என்று.

நாம் நம் பேச்சில் மட்டும் “சிலுவையை சுமந்து கொண்டு பின்செல்லுகிறேன்” என்று சொல்லாமல் அனுதினமும் வாழ்வில் சிலுவையுடன் இயேசுவை பின்தொடர வேண்டும்.

நாம் மற்றவர்களால் பலநேரங்களில் காயப்படுத்தப்பட்டுளோம். நம் குடும்பத்தவர்களால், உடன் சபை விசுவாசிகளால் நாம் வேதனைப்படுத்தப்பட்டுளோம். ஒருவனின் சத்துருக்கள் அவன் சொந்த வீட்டாரே என்று வேதம் கூறுகிறது. நம்மை சுற்றிலும் அநேக சத்துருக்கள் இருப்பதால் நாம் காயப்படுவது இயல்புதான். ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் உங்களை காயப்படுத்தும்போது அவர்கள் உங்களுக்கு சேவை செய்கிறார்கள் என்று நினைத்துகொள்ளுங்கள். சில காரியங்களை நாம் நமக்கே செய்ய முடியாது, எடுத்துக்காட்டாக நம்மை நாமே காயப்படுத்த முடியாது, எனவே தான் தேவன் மற்றவர்கள் மூலமாக நம்மை வேதனைக்குள்ளாக நடத்தி செல்கிறார். தேவன் நம்மை புல்லுல இடங்களிலும் அமர்ந்த தண்ணீர்களண்டையிலும் பின்பற்றும்படி மட்டுமல்ல சிலுவையில் அறையப்படும்படிக்கும் அழைக்கிறார். அதற்காக நாம் இரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சென்று இயேசுவின் பாடுகளில் பங்குபெற தேவையில்லை மாறாக அனுதினமும் நம் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரை பின்பற்றினால் போதும்.

இயேசுவானவர் ஒரு குற்றமும் செய்யாதபோதும் மற்றவர்களால் பொய்ச்சாட்சி சொல்லப்பட்டு வாதிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். அவர் ஒரு பாவமும் செய்யாத போதும் தண்டிக்கப்பட்டார். ஆனால் நாம் பாவிகளாய் இருந்தும் நமக்கு தண்டனைகள் கிடைக்கும்போது வருத்தப்படுகிறோம். இரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக இயேசு நமக்காக மரித்தார் என்பதை ஏற்றுக்கொண்டது போல இன்று நாமும் இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்டுள்ளோம் என்று நம்புவோம். இனி நான் அல்ல இயேசுவே எனக்குள் வாழ்கிறார் என்று ஜீவிப்போம். ஆல்பர்ட் என்கின்ற தேவ மனிதன் ஒருவர் தன் மனைவியுடன் ஊழியம் செய்துவந்தார். ஒருமுறை அவர் தனக்கு நெருங்கிய சில மக்களால் மிகவும் புண்படுத்தப்பட்டார். அவரால் அந்த அவமானத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை, அந்த வார்த்தைகள் அவருக்கு மனதளவில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த மன காயத்திலிருந்து வெளியேற ஒரு மனநல மருத்துவரை அணுகினார். தனக்கு ஏற்பட்ட கஷ்ட்டத்தை அவருடன் பகிர்ந்துகொண்டார். அந்த மருத்துவரும் எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டபின் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அந்த ஊழியரும் அவர் மனைவியும் மருத்துவர் ஏதேனும் பதில் கூறுவார் என்று அவர் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களின் எதிர்ப்பை உணர்த்த மருத்துவர் அவர்களுக்கு தேநீரை பருகக் கொடுத்துவிட்டு ஊழியரை பார்த்து சொன்னார் ” மரித்துப் போங்கள்” என்று. அதிர்ச்சியடைந்த அந்த ஊழியரும் மனைவியும் தேவனில் தங்களை பெலப்படுத்தி கொண்டார்கள். தன் வாழ்நாட்களில் கிடைத்த மிக சிறந்த உபதேசம் இது தான் என்று அந்த ஊழியர் கூறினார், அவர்கள் இன்னும் உயிருடன் தேவனுக்காக ஓடிக்கொண்டிருக்கிறார். இன்று தேவனும் நம்மோடு இதைத்தான் சொல்லுகிறார், “மரித்துப்போ “என்று, ஏனென்றால் நாம் சுயத்தில் மரித்தால் தான் இயேசு நமக்குள் ஜீவிக்க முடியும். இரெண்டாயிரம் ஆண்டுகள் முன்பு இயேசு கல்வாரியில் நமக்காக மரித்தார். இன்று நாம் நம் சுயத்தை வெறுத்து மரிக்க தயாராக இருக்கிறோமா?

இயேசுவின் சிலுவை மரணம் மிகவும் வேதனை நிறைந்த மரணமாக இருந்தது. வேதனை மட்டுமல்ல அவமானம் நிறைந்ததாகவும் காணப்பட்டது. பவுலடிகளார் சொல்லும்போது அவர் அவமானத்தை துடைத்தெறிந்தார்” என்று குறிப்பிடுகிறார். இயேசுவிற்கு சிலுவையில் ஏற்பட்ட அவமானத்தை பார்க்கும்போது போது நாம் கடந்து போகும் அவமானங்கள் அல்லது கடந்து வந்த அவமானங்கள் எல்லாம் ஒன்றுமில்லை. இயேசு கடந்து சென்ற பாடுகளின் கூடே நாமும் சென்று தியானிப்போம். அவருடைய வேதனைகளின் தொடக்கம் எங்கே என்று பார்த்தோமானால், இயேசு தம் சீஷர்களுடன் மேல்வீட்டில் அப்பத்தை எடுத்து பிட்டு இது உங்களுக்காக பிட்க்கப்படுகிற என் சரீரம் என்றும், திராட்சை ரசத்தை கொடுத்து உங்களுக்காக சிந்தப்படுகிற என் ரத்தம் என்று கூறினார். அந்த பஸ்காவில் எல்லா சீஷர்களுடன் யூதாஸ்காரியோதும் பங்கு கொண்டார், அந்த பஸ்கா விருந்திற்கு பின்பு யூதாஸ் என்ன செய்ய போகிறான் என்பதையும் இயேசு நன்றாக அறிந்திருந்தார். அறிந்திருந்தும் அவனுக்கும் அப்பத்தையும், ரசத்தையும் கொடுத்தார். அதன் பின்பு அவர்கள் ஒலிவமலைக்கு கடந்துபோனார்கள். பொதுவாக இயேசு தம் சீடர்களுடன் ஒலிவமலைக்கு ஜெபம்பண்ணும்படி கடந்துபோவார். தம் சீஷர்களிடம் விழித்திருந்து ஜெபம்பண்ணும்படி கேட்டுக்கொண்டு அவர் சற்று அப்புறம் சென்று “பிதாவே இந்த பாத்திரம் நீங்க கூடுமானால் நீங்கட்டும், ஆகிலும் என் சித்தம் அல்ல உம் சித்தபடியே ஆகட்டும் “என்று ஒப்புக்கொடுத்தார். நாமும் நமது வேண்டுதல்களை தேவனிடம் சொல்லும்போது “என் விருப்பமல்ல உம்சித்தின் படி ஆகட்டும்” என்று விண்ணப்பம் பண்ணுவோம்.

அதன் பின்பு திரளான ஜனங்கள் கையில் தீவட்டி, வாள் போன்ற ஆயுதங்களோடும் யூதாசுடன் இயேசுவிடம் வந்தார்கள், யூதாஸ் இயேசுவை கட்டியணைத்து முத்தமிட்டான். அப்போது இயேசு அவனை நோக்கி சிநேகிதனே என்று அழைப்பதை காணலாம். நாம் யாராவது நமக்கு துரோகம் செய்யப்போகிறார்கள் என்று அறிந்தால் அவரை சிநேகிதனே என்று அழைப்போமா? இயேசுவிற்கு பஸ்காவின் மூலம் யூதாசுடன் ஒரு உடன்படிக்கை இருந்தது, அதனால் தான் அவனை சிநேகிதனே என்று அழைக்கிறார். இந்த நிகழ்விற்கு முன்பு தான் வியாகுலத்துடன் தன் வேர்வைத்துளிகளை இரத்தமாக நிலத்தில் சிந்தினார். வேர்வை இரத்தமாக சிந்த வாய்ப்புள்ளதா என்று பார்த்தால் மருத்துவர்கள் அதிக துயரம் அல்லது வியாகுலத்தால் தான் அப்படி நடக்க வாய்ப்புள்ளது என்று நிரூபித்துள்ளார்கள். இயேசுவிற்கு சிலுவையின் வேதனை அந்த வேர்வைத்துளிகள் இரத்தமாக சிந்திய நேரத்திலிருந்து தொடங்கியது. அதன் பின்பு தான் யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுத்தான். பின்பு இயேசுவை கைதுசெய்து ராத்திரியிலே அன்னாவும், காய்ப்பவும் விசாரணை செய்தனர். பிலாத்துவும், ஏரோதும் கூட விசாரணையில் ஈடுபட்டனர். அந்த காலசூழ்நிலையில் கைதுசெய்யப்படுகிறவருக்கு சில உரிமைகள் ரோம அரசின் சட்டதிட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஓன்று தான் இரவுநேரத்தில் விசாரணை செய்யக்கூடாது, ஆனால் இயேசுவை இரவுநேரத்தில் தான் கைதுசெய்து விசாரித்தனர். இயேசுவிற்குரிய பல நியாயமான உரிமைகளும் நிராகரிக்கப்பட்டது. அவருடைய நீதிகள் மறுக்கப்பட்டன. இன்று பலநேரங்களில் நமது உரிமைகளுக்காக நாம் வழக்காடுவதுண்டு, ஆனால் இயேசுவோ தமது உரிமைகளுக்காக வாயை திறக்கவில்லை. பிலாத்து இயேசுவின் மௌனத்தை குறித்து ஆச்சரியப்பட்டு, அவரிடம் மறுஉத்தரம் கூறும்படியும் கேட்டுக்கொண்டும் அவர் தமது வையை திறக்கவில்லை. ஒரு மனிதன் இப்படியாக கூறினார் “அன்று இயேசுவின் மௌனத்தை குறித்து உலகம் ஆச்சரியப்பட்டது ஆனால் இன்று உலகம் கிறிஸ்தவர்களின் பேச்சுவார்த்தைகளை குறித்து ஆச்சரியப்படுகிறது என்று. கிறிஸ்தவர்களாய் இருக்கிற நாம் சற்றும் யோசிக்காமல் பிறரை காயப்படுத்துவது, சத்தத்தை உயர்த்துவது, வாதிப்பது போன்ற காரியங்களை உரிமை என்று சொல்லி செய்கிறோம், ஆனால் இயேசுவை பாருங்கள் அவருக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டிருந்தும் தமது வையை திறக்கவில்லை. 

யூதாஸ்காரியோத் இயேசுவை காட்டிக்கொடுத்தான், அவருக்கு நெருங்கிய 12 சீஷர்களும் அவரைவிட்டு ஒடிப்போனார்கள். அது இயேசுவிற்கு மேலும் வேதனையை கொடுத்தது. நமது வாழ்வில் கூட கஷ்டங்களில், நெருக்கங்களில் நாம் நம்பின பலர் நம்மை விட்டு ஓடி போனபோது நமக்கு வேதனையாய் இருந்திருக்கும். அப்படிபட்ட சூழ்நிலைகள் நம் வாழ்வில் ஏற்படும்போது கல்வாரியில் தொங்கிய இயேசுவை நினைத்து பார்ப்போம்.

மேலும் இயேசுவுக்கு நெருக்கமான சீஷனும், பாறை என்று அழைக்கப்பட்ட பேதுருவும் இயேசுவை மூன்றுதரம் மறுதலித்தது இன்னும் வேதனையை அளித்தது. இயேசு பேதுருவிடம் “நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று முன்னமே எச்சரித்த போதும், நான் உம்மோடு கூட மரிக்கவும் தயார் என்று சொன்னான். ஆனால் இயேசுவின் துன்ப நேரத்தில் அவரை மறுதலிக்கவும், சபிக்கவும் செய்தான் என்று பார்க்கிறோம். பேதுரு மட்டும் அல்ல மற்ற சீஷர்களும் அப்படியே செய்தார்கள். 

இயேசு பிலாத்துவின் கேள்விகளுக்கு பதிலளிக்காவிட்டாலும், பிரதான ஆசிரியனின் சில கேள்விகளுக்கு பதில் சொல்லுவதை காண்கிறோம். நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவா? நீர் யூதருடைய ராஜாவா? என்கிற கேள்விகளுக்கு “ஆம்” என்று பதிலளித்தார். உடனே ஒரு சேவகன் ஓங்கி இயேசுவின் கன்னத்தில் அறைந்தான். பின்பு இயேசுவை முகத்தில் குத்தினார்கள், ரோமத்தை பிடுங்கினார்கள், சாட்டையால் அடித்தார்கள், சாட்டையின் ஓரத்தில் ஆணிகளும் முள்ளுகளும் கட்டி அடித்தார்கள். இப்படி இயேசுவை மகா வேதனைக்கு உட்படுத்தினார்கள். கைதிகளை உபத்ரவப்படுத்துவதில் ரோம அரசினர் பெயர்பெற்றவர்கள், இயேசுவை ஒரு தொழுமரத்தில் கட்டி சாட்டையால் அடித்தபோது அவருடைய ரத்தமும் சதையும் கிழிந்து வந்ததை காண்கிறோம். அவருக்கு ஏற்பட்ட இந்த பெரிய காயங்களால் நமக்கு என்ன நன்மை கிடைத்தது என்று பார்தோமானால், அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம் என்று வேதத்தில் படிக்கிறோம். நாம் இன்று பல பெலவீனத்தினிற்று, சுகவீனத்தினிற்று, ஜீவனோடு இருக்கிறோமென்றால் இரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இயேசு நாமக்காக பட்ட சட்டை அடிகளும் காயங்களும் தான். பிதாவானவர் நமக்காக இயேசுவை நொறுக்க சித்தம்கொண்டார் அதற்க்காக அவரை ஸ்தோத்தரிப்போம்.

மேலும் கூர்மையான ஆணிகளாலான கிரீடத்தை உண்டக்கி, அதை அவர் தலையில் வைத்து சேவகன் ஒருவன் மிதித்தான். பொதுவாக அந்த முள்கிரீடத்தை தலையில் வைக்கும் போது அது மண்டைஓடுகளை துளைத்து கண்களை வெளியே தள்ளும் ஆற்றலுடையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இயேசு தான் அறையப்படப்போகும் சிலுவையை தானே சுமந்து கொண்டுபோனார். அந்த பாரமான சிலுவையை ரோம அரசினர் கைதிகளை கொண்டு சுமக்க வைப்பதில்லை ஆனால் இயேசுவை சிலுவையை சுமக்க வைத்தனர். அங்கேயும் அவருக்கு அநீதியே ஏற்பட்டது. இயேசுவைபோல நாம் ஒவ்வெருவருக்கும் ஒரு சிலுவை கொடுக்கப்பட்டுள்ளது அதை நாமே சுமக்கவேண்டும்.

பின்பு கொல்கதாவின் மேல் சென்று இயேசுவை அந்த சிலுவையில் கிடத்தி கூர்மையான இரும்பு ஆணிகளை கொண்டு மணிக்கட்டில் அடித்தார்கள். அதனால் நரம்புகளில் ஆணிபாய்ந்து அவருடைய சரீரத்தில் பெரிய அதிர்வு ஏற்பட்டது. கால்களிலும் ஆணி அறைந்து பின்பு சிலுவையை வெட்டப்பட்ட குழியில் இறக்கி நேராக நிறுத்தினர். இந்த எல்லா சம்பவங்களையும் பழைய ஏற்பாடுகளில் தீர்க்கதரிசிகள் கூறியுள்ளனர், சங்கீதம் 23 ல் இந்த நிகழ்வுகளின் நிழலோட்டதை தாவீது எழுதியுள்ளார்.

இயேசுவானவர் சிலுவையில் தன் கை கால்களில் ஆணிகளால் அறையப்பட்டு தொங்கும்போது, உடல் முழுவதும் வேதனை நிறைந்தவராய் காணப்பட்டதால் அவருக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. பொதுவாக ஒரு மரண அவஸ்தையில் உள்ளவர்கள் முதலில் கேட்பது, குடிப்பதற்கு தண்ணீர் தான். இயேசுவின் சிலுவை மொழிகளில் ஒன்று “தாகமாயிருக்கிறான்” என்பதாகும். மத்தேயு 27:34 ல் கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. சிலுவையில் தொங்கிய இயேசுவிற்கு இரெண்டு முறை “காடி” குடிக்கக் கொடுத்தார்கள், அதில் முதல் முறை கொடுத்ததை தான் ருசிபார்த்து குடிக்க மனதில்லாதிருந்தார். ஏனென்றால் அந்த காடிக்கு ஒருவரை “மயக்கநிலைக்கு ” கொண்டு செல்லும் தன்மையுண்டு, அதனால் உடல் வேதனைகளை உணர்த்துக்கொள்ளமுடியாது, எனவே தான் இயேசு அதை குடிக்க மறுத்தார். அந்த காடி தண்ணீரை இயேசு குடித்திருந்தால் சாத்தான் இயேசுவை “வேதனையின்றி சிலுவையில் தொங்கினீர்” என்று குற்றப்படுத்தியிருப்பான். ஆகவே இயேசு அனுபவிக்க வேண்டிய எல்லா வேதனைகளையும் முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்று தீர்மானித்து அந்த காடியை குடிக்க மறுத்தார்.

யோவான் 19:29,30 ஆகிய வசங்களில் “காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு இயேசு காடியை வாங்கி குடித்தார் என்று பார்க்கிறோம். அதென்னவென்றால் பழையேற்பாட்டில் பஸ்காவின் போது ஈசோப்பு தண்டில் ஆட்டுகுட்டியின் இரத்தம் தோய்க்கப்பட்டு, வீட்டின் வாசலிலும், நிலைக்கால்களிலும் பூசப்பட்டது. அந்த கசந்த ஈசோப்பு “பாவத்தை குறிக்கிறது”, இயேசுவானவர் பாவத்தை அந்த கசந்த காடியை குடித்ததுபோல குடித்தார் என்று பார்க்கிறோம். அவர் பாவம் செய்யவில்லை ஆனால் முழுலோகத்தில் பாவத்தையும் அவர் ருசித்துப்பார்த்தத்தினால் அவர் பாவமானார். அந்த பாவம்நிறைந்த கசப்பு காடியை இயேசு குடித்தபோது பிதாவானவர் தம் முகத்தை சில நேரத்திற்கு மறைத்தார்.

இயேசுவானவர் கெத்சமனே தோட்டத்தில் இதற்காகத்தான் அழுதார். பிதாவானவர் இயேசுவை கைவிடும் நிலைமை ஏற்படும் என்று அறிந்ததால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீக்கும் என்று மன்றாடினர். ஆனாலும் பிதாவின் சித்தப்படி அந்த கசப்பு காடியை குடித்து, “முடிந்தது” என்று சொல்லி தன் ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

ரோம சேவகர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லவில்லை., மாறாக இயேசுவே தன் ஆவியை பிதாவிடம் ஒப்புக்கொடுத்தார். எப்படி ஒரு தெய்வம் கொல்லப்படமுடியும், அப்படி கொல்லப்பட்டால் அது தெய்வமல்ல. இயேசுவோ மாறாக தன் ஆவியை அவரே ஒப்புகொடுத்து மரித்தார். அவர் “முடிந்தது ” என்று சொல்லி ஜீவனை ஒப்புகொடுத்ததை காண்கிறோம், முடிந்தது என்பதற்கு முற்றும் செலுத்துவிட்டாயிற்று என்று அர்த்தம் கொள்ளும். முழு உலகத்தின் பாவத்திற்கு தேவன் வைத்திருந்த தண்டனை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு அந்த பாவத்தின் கடனை கொடுத்து தீர்த்தர். அதனால் தான் நாம் இன்று ஜீவனோடு இந்த உலகத்தில் வாழ்கிறோம்.

தேவ ஊழியர் ஒருவரிடம் பத்திரிகையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர், அதென்னவென்றால் சிலுவையில் நடந்த நிகழ்வை ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று, அந்த ஊழியக்காரர் சொன்னார் பரிமாற்றம் என்று. அப்போது அவர்கள் ஏன் பரிமாற்றம் என்று சொல்லுகிறீர்கள் அதை விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டனர். அப்போது அவர் சொன்னார், “மரணத்திற்கு பதிலாக ஜீவன் கிடைத்தது. சாபத்திற்கு பதிலாக இரக்கம், வியாதிக்கு பதிலாக சுகம் கிடைத்தது என்றார். இயேசு நமக்காக சகலத்தையும் சிலுவையின் மூலம் நன்மையாக மாற்றினார். சாபத்தையும், வேதனையும், மரணத்தையும், நோய்யையும் நம்மிடமிருந்து அவர் எடுத்து சிலுவையில் எல்லாவற்றிக்கு பதிலாக ஜீவனை தந்தார்.

சிலுவையிலும் இயேசு தமது ஊழியத்தை நிறைவேற்றினார். தன்னுடன் அறையப்பட்ட கள்வனை காப்பாற்றி, தன் தாய் மரியாளை சீடன் யோவானிடம் ஒப்படைத்தார். தம் ஆவியை கொடுப்பதற்கு முன், மேலும் ஒரு காரியத்தை இயேசு செய்தார், “பிதாவே, இவர்களை மன்னியுங்கள், தாங்கள் செய்வது என்னவென்று அறியாதிருக்கிறார்கள்” என்று கூறினார். இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடு அவர் அனைவரையும் மன்னித்தபோது முடிந்தது. அதேபோல, நம்மைக் காயப்படுத்திய அனைவரையும் மன்னித்தால், நமது சிலுவை மரணமும் வெற்றிகரமாக முழுமையடையும்.

கலைஞர்கள் பாரம்பரியமாக சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவத்தை இடுப்புத் துணியுடன் சித்தரித்தாலும், சிலுவையில் அறையப்பட்டவர்கள் பொதுவாக நிர்வாணமாக தொங்கவிடப்படுவர். இது உச்சகட்ட அவமானத்தைக் காட்டுகிறது. ரோமானியர்கள் சிலுவையில் அறையப்பட்ட நபரின் கால்களை உடைத்து, அவர் இறந்துவிட்டதை உறுதிசெய்வார்கள். அவ்வாறு எலும்புகள் முறிக்கப்பட்டால் விரைவில் அவர்கள் இறந்துவிடுவார்கள். ஆனால் இயேசுவின் கால்களை உடைக்க வந்த வீரர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதைக் கவனித்து அவர் கால் எலும்புகளை முறிக்கவில்லை. இயேசுவைப் பற்றிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்பது இங்கே நிறைவேறியது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் பிரதான நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்ததால், அவ்வழியாக சென்ற பலர் காரணமே இல்லாமல் இயேசுவை கேலி செய்தார்கள். இயேசு பலருக்குக் காட்சிபொருளாக மாறினார். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு தேவன் பலரைப் பயன்படுத்தினார் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இயேசுவின் மரணத்திற்குப் பிறகும், தேவன் இன்னும் பலரை பயன்படுத்தினார் என்று பார்க்கிறோம். இயேசுவின் உடலை அடக்கம் செய்ய, தேவன் நிக்கோதேமுவையும் அரிமத்தியா யோசேப்பையும் பயன்படுத்தினார். இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் அல்ல அவரை அதிலிருந்து இறக்கினார்கள். நம்மைச் சிலுவையில் அறைந்தவர்கள் (நமக்குத் தீங்கிழைத்தவர்கள்) ஒருபோதும் திரும்பி வந்து நம்மிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு தெளிவுப்படுத்துகிறது. முதலில் சில மனிதர்களை தேவன் பயன்படுத்தி இயேசுவை சிலுவையில் அறையவைத்தார் பின்பு இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்ய தேவன் வேறு சிலரை நியமித்தார். இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்த பிறகு அனைவரும் புறப்பட்டு சென்றனர். அவருடைய உடல் அந்த கல்லறையில் தனித்து விடப்பட்டது. நாமும் பலநேரங்களில் இப்படி மறக்கப்பட்டிருக்கிறோமா? நாமும் தனிமை மற்றும் இருளின் காலத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை தான் அந்த கல்லறை நமக்கு நினைவூட்டுகிறது. அப்போதுதான் உயிர்த்தெழுதலின் விடியல் நமக்கு வரும். ஆம், கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

சிலுவையில் அறையப்படுதலின் மூன்று நிலைகளை பார்த்தோம், அறையப்படுதல், கல்லறையில் வைக்கப்படுத்தல், உயிர்த்தெழுதல். கர்த்தராகிய இயேசு புதிய உயிர்த்தெழுதலின் வல்லமையுடன் உயிர்த்தெழுந்தார். நமக்கு இந்த வல்லமை இருக்கிறதா? வெற்றிகரமான சிலுவை மரணத்தை கடந்து சென்றால் மட்டுமே அந்த வல்லமையை நாம் பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் சிலுவை மரணம் வெற்றிகரமாக முடிந்ததா? அல்லது நீங்கள் இன்னும் அந்த சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறீர்களா? உங்களைத் துன்புறுத்தியவர்கள் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள் என்று நீங்கள் இன்னும் நினைக்கிறீர்களா? என் அன்பு சகோதர சகோதரிகளே, அவர்கள் ஒருபோதும் திரும்பி வரமாட்டார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் திரும்பி வரவில்லை, இயேசு அவர்களைத் தேடிச் செல்லவுமில்லை. இயேசு தன்னை நேசிப்பவர்களுக்கு மட்டுமே காட்சிகொடுத்தார். நாம் அந்தச் சூழ்நிலையில் இருந்திருந்தால், முதலில் பிலாத்துவின் முன் தோன்றியிருப்போம், நம்மைத் துன்புறுத்தியவர்கள் பின்தொடர்ந்து பழிவாங்கியிருப்போம். நாம் ஒருபோதும் பழிவாங்கக் கூடாது. பழிவாங்குவது தேவனுக்குரியது என்று வேதம்சொல்கிறது. எல்லாவற்றையும் நம் நீதியுள்ள தேவனின் கைகளில் கொடுப்போம். நாம் பழிவாங்க முயன்றால் நமது சிலுவை மரணம் முழுமையடையாது.

இன்று நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் வெற்றிகரமாக சிலுவையில் அறையப்பட்டால் தான், அவருடைய சேவைக்காக நமக்கு உயிர்த்தெழுதலின் வல்லமை மற்றும் அதிகாரம் மிகவும் அதிகமாக இருக்கும். நம்முடைய சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவைப் பின்பற்ற தீர்மானம் செய்வோம். வாழ்நாள் முழுவதும் நம் சிலுவையைச் சுமக்க தேவன் நமக்கு கிருபை புரிவராக.

மொழிபெயர்த்தவர்,

பொன்சிபா.வி

yt subscribe
House of Prayer, Trivandrum
2.08K subscribers
Subscribe

Related Articles

Subscribe to our newsletter