மணவாளன் இயேசு

House of Prayer
Apr 22 · 1 minute read

பொதுவாக திருமணத்தின் போது எபேசியர் 5:25 மேற்கோள் காட்டி, கிறிஸ்து சபையை நேசிப்பது போல் கணவர்கள் தங்கள் மனைவிகளை நேசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும். எனினும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவை திருச்சபையின் மணவாளனாக நாம் எத்தனை முறை நினைக்கிறோம்? அவர் நம் தேவன் என்றும், அவர் நமக்கு செய்யும் எல்லாவற்றிற்கும், நம் கண்ணோட்டம் அப்படியா இருக்கிறது? இந்தச் செய்தியின் மூலம் தேவன் என் இருதயத்தில் வைத்த பாரம் என்னவென்றால், மணவாளன் இயேசு கிறிஸ்துவின் இருதயத்தின் அழகை வெளிப்படுத்தி கிறிஸ்துவின் மணமகளை தயார் செய்வதே. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகளைப் பற்றி நமக்குத் தெரியும்; ஒரு மணமகள் தனது திருமணத்திற்குத் தயாராவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறாள், ஏனென்றால் அவள் மணமகனுடன் ஒன்றாக இருக்க மிகவும் ஏங்குகிறாள். அதுபோன்றே, மணவாளன் இயேசுவின் இருதயத்தின் அழகை அறிந்தோமானால், நாமும் அவருக்காக தயாராக இருக்க விரும்புவோம். ஆகவே, மணவாளன் இயேசுவின் இருதயத்தின் இந்த வெளிப்பாட்டை நாம் பெறுவது, அவருடைய சபைக்கு மிகவும் முக்கியம். அப்பொழுது இயேசுவைப் பற்றிய நமது கண்ணோட்டத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஆம், அவரே நம்முடைய கர்த்தரும் ராஜாவும், இருந்தும் நம்முடைய மணவாளனும் ராஜாவும் அவரே.

நம் கண்ணோட்டத்தில் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்காக, கர்த்தராகிய இயேசு திருச்சபையின் மணவாளனாக தனது சபைக்காகச் செய்யும் ஐந்து விஷயங்களைக் கருத்தில் கொண்டு தியானிப்போம்.

1. மணவாளனாக இயேசு எப்பொழுதும் தனது மணமகளுக்காக பரிந்து பேசுகிறார்

எபி 7:25 மற்றும் ரோமர் 8:34 ல், பரலோகத்திலுள்ள தம்முடைய மக்கள் அனைவருக்காகவும், இயேசு பரிபூரணமாக பரிந்துப்  பேசும் ஊழியத்தைப் பற்றி வாசிக்கிறோம். தேவனின் பரிபூரண சித்தம் அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றப்படவும் மேலும் நீங்கள் பாவத்தினின்றும், சத்துருவின்றும் பாதுகாக்கப்படவும், இயேசு தாமே சிலுவையில் நமக்காக சிந்திய தம் இரத்தத்தின் அடிப்படையில் நமக்காக பரிபூரணமாக பரிந்து பேசுகிறார். நீங்கள் கடந்து செல்லும் எல்லாவற்றிலும் அவர் மிகுந்த அக்கறை கொண்டு அவரே உங்களுக்காக ஜெபிக்கிறார். லூக்கா 22:31-32 ல், இயேசு தம்முடைய சீஷர்கள் சாத்தானால் சோதிக்கப்படுவதற்கு முன்பே, அவர்களுக்காக எப்படி ஜெபித்தார் என்பதையும், பேதுரு தனது விசுவாசத்தை இழக்காமல் இருக்க அவர் பேதுருவுக்காக எப்படி குறிப்பாக ஜெபித்தார் என்பதையும் நாம் வாசிக்கிறோம். நாம் தூண்டப்படுவதற்கு அல்லது சோதிக்கப்படுவதற்கு முன்பாகவே, நம்முடைய மணவாளன் இயேசு, பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நமக்காக ஏற்கனவே பரிந்து பேசிவிட்டார் என்பதை நாம் உறுதியாக விசுவாசிக்கலாம். ஆதலால், கிறிஸ்து நமக்காக இவ்வளவு பரிபூரணமாக ஜெபிப்பதினால், நாம் எதற்கும் பயப்படாமல் அவரது மேலான கவனிப்பு மற்றும் பாதுகாப்பிலும் இருக்கலாம். ஸ்காட்லாந்து மந்திரி ராபர்ட் முர்ரே மெக்கீன் ஒருமுறை கூறியது போல – “கிறிஸ்து அடுத்த அறையிலிருந்து எனக்காக ஜெபிப்பதை நான் கேட்க முடிந்தால், லட்சக் கணக்கான எதிரிகளுக்கும் நான் பயப்பட மாட்டேன். எனினும், அவரே எனக்காக ஜெபிப்பதினால், அவர் எங்கிருந்து ஜெபித்தாலும், தூரம் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை”.

2. மணவாளனாக இயேசு எப்பொழுதும் தம்முடைய மணமகளை தம் வார்த்தையால் அறிவுறுதிப் பரிசுத்தப்படுத்துகிறார்.

கர்த்தராகிய இயேசு தம்முடைய வார்த்தையின் மூலம் அவருடைய சபையை அதன் சொந்த நன்மைக்காகவே  பரிசுத்தமாக்குகிறார் (எபே. 5:26). மேலும் கூற வேண்டுமானால், மணவாளன் இயேசுவின் வார்த்தையின் எல்லா ஊழியமும் அவருடைய இந்த அன்பின் மூலம், அவளை மகிமைப்படுத்துவதற்கே. இப்போதும், ​​வார்த்தையின் எல்லா ஊழியத்தையும் நாம் அப்படித்தான் உணர்கிறோமா? மேலும், இயேசு தம்முடைய மணமகளை கீழ்ப்படிதலுக்கு அறிவுறுத்தும் ஒரு மென்மையான கணவர் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். வேதாகமத்தில் இரண்டு கணவர்கள் நமக்கு அறிமுகமாக்கப் படுகிறார்கள். இரட்சிப்பிற்கு முன்பு, நியாயப்பிரமாணத்தைக் நம் கணவராக கொண்டிருந்தோம் (ரோ. 7:3-4). இப்பொழுதோ கிறிஸ்துவை நம் கணவராகக் கொண்டிருக்கிறோம். இவ்விரண்டு கணவர்களும் மிகவும் வித்தியாசமானவர்கள். கீழ்ப்படிதலை மட்டுமே கட்டளையிட்டு நடத்தும் சட்டத்தைப் போலல்லாமல், இயேசு ஒரு கிருபையுள்ள கணவராக, அவர் கட்டளையிடுவது மட்டுமல்லாமல், அவர் கட்டளைகளில் நம்மை நடத்தவும், அவர் நியாயங்களை நாம் கைக்கொள்ளவும், அவைகளின்படி நாம் செய்யவும், அவரே நம் உள்ளத்திலே தம்முடைய ஆவியை வைத்து, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் நம்மில் நடப்பிக்கிறார் (பிலி.2:12-13; எசேக் 36:27; எரே. 31:33). எனவே, அது கண்டிப்பதோ, கடிந்துகொள்ளுவதோ அல்லது திருத்துவதோ, முன்குறிக்காத ஒப்புக்கொடுத்தல் மற்றும் கீழ்ப்படிதல் மூலம் அவர் கூறும் எதையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். ஏனென்றால், அது நம் மணவாளனுடைய வார்த்தையாய் இருக்கிறது.

3. மணவாளனாக இயேசு எப்பொழுதும் தம்முடைய மணமகளை நிபந்தனையின்றி நேசிக்கிறார்

நிபந்தனையற்ற அன்பென்று கூறும் பொழுது, எதையும் பொறுத்துக்கொள்ளும் அன்பை இங்கு குறிப்பிடவில்லை. பாவம் செய்வதற்கு அனுமதியளிக்கும் அத்தகைய அன்பை வேதாகமம் கற்பிக்கவில்லை. அதற்கு மாறாக, தேவனின் அன்பு நம்மை பாவத்தில் வாழ்வதை குறித்து எச்சரித்து ஒழுங்குபடுத்துகிறது (எபி.12:6-7; யோவா. 5:14).  இப்போதும் நிபந்தனையற்ற அன்பென்று கூறும் பொழுது வேதாகமம் குறிப்பிடுவது என்னவெனில், தேவனின் அன்பு என்னுடைய எந்த ஒரு வேலையையும் அடிப்படையாகக் கொள்ளாமல் அவருடைய கிருபையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆகவே உபாகமம் 7:7-8 ல் கூறுவதுபோல, கர்த்தர் தம்முடைய ஜனங்களை நேசித்ததினால், அவர்கள் மீது அன்பை வைத்தார். இது, ஒன்றை சுற்றியே காரணபடுத்துவதுப்போல் தோன்றலாம், ஆனால் அதை விட மேலான காரணம் ஒன்றும் இல்லை. தேவன் அன்பானவர் மற்றும் தம்முடைய ஜனங்கள் மீது அன்பு கூறுகிறவர். மேலும் கூறவேண்டுமென்றால், தேவன் தம்முடைய சுபாவத்தினாலேயே உங்கள் மீது அன்பு கூர்ந்தாரேயன்றி உங்கள் தகுதியினால் அல்ல. இப்போதும், தேவன் தம் சுபாவத்திலிருந்து எப்படிப்பட்ட அன்பை நமக்கு அருளுகிறார்? நாம் வேதத்தை ஆராய்ந்தோமானால், இயேசுவை நேசிப்பது போலவே, பிதாவாகிய தேவன் உங்களையும் நேசிக்கிறார் என்பதை காணக்கூடும் (யோவான் 17:23).  இதில் மிகவும் திகைக்க வைக்கும் உண்மை என்னவென்றால், தம்முடைய நேச குமாரன் மீது வைக்கப்பட்ட அந்த நித்திய அன்பு, இப்போதும் கிறித்துவுக்குள் இரட்சிக்கப்பட்ட அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக, இயேசு பிதாவாகிய தேவனால் நேசிக்கப்படுவதைப் போலவே உங்களையும் நேசிப்பதைக் காண்கிறோம் (யோவா.15:9). பிதாவனவரால் நேசிக்கப்படும் அதே அன்பை போலவே குமாரன் நம்மை நேசிக்கிறார். இறுதியாக, பரிசுத்த ஆவியானவர் தேவ அன்பினால் நம் இருதயங்களை நிரப்புவதினால் (ரோமர் 5: 5) நாம் இவ்வளவு பெரிய அன்பை திரித்துவ பரிமாணங்களுடன் உண்மையாக உணரமுடிகிறது. திரித்துவத்தின் நபர்கள் நித்திய காலத்திலிருந்து அனுபவித்த அன்பையும் ஐக்கியத்தையும் நாமும் அனுபவிக்கும்படி கிறிஸ்துவின் மூலமாய், கர்த்தர் நம்மை மீட்டுக்கொண்டார். எப்படிப்பட்ட ஒரு  அன்பு இது! இதை விட மேலாக யாராலும் நம்மை நேசிக்க முடியுமா? நம்முடைய நடைமுறையின் நன்மைக்காக திரித்துவத்தின் மர்மமான கோட்பாடு ஏன் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும் இங்கே கற்றுக்கொள்கிறோம். ஏனென்றால், தேவனுடைய அன்பின் தனித்தன்மையையும், ஆழத்தையும் புரிந்து மகிமைப்படுத்த  திரித்துவம் நமக்கு உதவுகிறது. யோவான்.17:26ல், பிதாவாகிய தேவன் தன்னிடத்தில் வைத்த அன்பு நம்மில் இருக்கும்படிக்கும், தாமும் நம்மில் இருக்கும்படிக்கும், தேவனுடைய நாமத்தை நமக்குத் தெரியப்படுத்தினார்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார். தேவனின் அளவற்ற அன்பின் ஆழத்தையும் அகலத்தையும் புரிந்துகொள்ளத் திரித்துவம் நமக்கு உதவுகிறது. அல்லேலூயா! நம்முடைய மணவாளன் இயேசுவின் இந்த நிபந்தனையற்ற அன்பை அறிவது இரண்டு வழிகளில் நமக்கு உதவுகிறது. பெருமையை விரும்புபவர்களுக்கு, நம்முடைய கீழ்படிதலினால் அல்ல மாறாக தேவன் தம்முடைய சுபாவ அன்பினாலேயே நம்மை நேசிக்கிறார் என்பதை உணர்த்துகிறது மேலும், வீழ்ந்திருக்கும் நமக்கு, அவர் தம் இருதயத்தில் எப்போதும் நமக்காக இடம் உண்டென்ற நம்பிக்கையுடன் மனந்திரும்புவதற்கு நம்மை ஊக்குவிக்கிறது.

4. மணவாளனாக இயேசு தாமே ஒரு முன் மாதிரியாக இருந்து தான் மணவாட்டியை தயார் செய்கிறார்.

இயேசு முதன்மையாக அறிவுறுத்தல் அல்லது கட்டளைகள் மூலம் நமக்கு உணர்த்தாமல், மாறாக அவருடைய சொந்த சுபாவம் மற்றும் தன் முன்மாதிரியையும் வெளிப்படுத்துவதன் மூலமே நம்மில் மாற்றம் உண்டு பண்ணுகிறார். நாம் அவருடைய வார்த்தையைப் படிக்கும்போதும் கூட, அவருடைய கீழ்படிதலைப் பற்றியே படிக்கிறோம், அதின் மூலமாக நாமும் அவருடைய சாயலுக்கு ஒப்பாகக்கூடும். ஒவ்வொரு முறையும் அவர் நம்மை கீழ்படியுமாறு அழைக்கும் பொழுதும், ​​ தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி நமக்கு முன்மாதிரியைப் பின்வைத்துப் போனதை காணலாம் (1பேது 2:21-22a). இயேசுவின் முன்மாதிரியின் மூலம், எந்த ஒரு சூழ்நிலையிலும் கீழ்ப்படிதல் என்ன என்பதை நாம் அறியாது இருந்ததில்லை. எல்லாச் சூழ்நிலையிலும், இயேசு பிதாவாகிய தேவனுக்கு கீழ்படிந்திருந்தார் மேலும், முதலில் தான் கீழ்படியாத யாதொன்றையும் நாம் கீழ்படியும்படி நம்மிடம் கேட்டதுமில்லை. சூழ்நிலை மாறும், எனினும் அவர் எல்லாவற்றையும் எதிர்கொண்டார் (எபிரேயர் 4:15). எனவே, நாம் கீழ்ப்படிதலின் பாதையில் இருக்கும்போது, ​​​​நாம் ஒருபோதும் தனிமையில் கைவிடப்படுவதில்லை. ஏனென்றால், இயேசு ஒருபோதும் தம்முடைய மணவாட்டியை கைவிடுவதில்லை, அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். இயேசு இவ்வுலகத்தில் எல்லா பாடுகளையும் எதிர்கொண்டபடியால், நமது போராட்டம் குறித்து நம் இருதயத்தின் பாரத்தை அவர் கேட்பார் என்ற நம்பிக்கை மட்டுமல்லாமல் நமக்காக பரிதப்பிப்பார் என்ற நம்பிக்கையோடு நாம் எப்பொழுதும் அவர் சமூகத்தில் ஊற்றக்கூடும். எப்படி ஒரு ஆறுதல்படுத்தும் மணவாளன் அவர்! நாம் தீயை அல்லது தண்ணீரை கடந்தாலும், அவர் நம்மோடு இருக்கிறார் (ஏசா. 43:2); நம்முடைய கீழ்படிதலுக்காக தீச்சூளையில் எறியப்பட்டாலும், “நான்காவது மனிதனாக” அவர் அங்கும் நம்முடன் இருப்பார்(தானி 3:24-25). நம்முடைய எல்லாப் பாடுகளையும் அவர் புரிந்துக்கொண்டு, நம்மை எப்படி ஆறுதல்படுத்தி கீழ்ப் படுத்துவதென்று அறிந்த, நமக்காக பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராக இருக்கிறார் (எபி. 2:18). ஆகவே, அவருடைய முன்மாதிரியைப் பின் பற்றும்படியான கிருபைக்காக நாம் நம்பிக்கையுடன் ஜெபத்தில் நம் மணவாளனை அணுகுகிறோமா?

5. மணவாளனாக இயேசு எப்போதும் தம் மணவாட்டியின் நன்மைக்காகத் தம்மையே தியாகம் செய்கிறார்.

மணவாளன் இயேசுவினுடைய அன்பின் முக்கிய அம்சம் என்னவென்றால், அவர் தம்முடைய மணவாட்டிக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் (எபி 5:27). தம்மை தாமே ஒப்புக்கொடுக்கும் அளவிற்கு அவர் தன் மணவாட்டியின் மீது அன்புக்கூர்ந்தார் (கலாத்தியர் 2:20). தன் மணவாட்டியின் மீட்பிற்காக, அவர் தம்முடைய பிராணனைக்கூடப் பெரிதாக எண்ணவில்லை. இப்போது நாம் புரிந்துக்கொள்ளவேடியது என்னவெனில், இயேசுவின் இந்த அன்பும், தியாகமும் நாம் செலுத்தும் எல்லா பலிகலிலும், நம் அன்பிலும் மேலானதாகவே நிற்கும். நாம் அவருக்கு ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது (ரோ. 11:35) மற்றும் இதனால் நாம் தேவபக்தியுள்ளவர்கள் என்று நிரூபிக்கும்படி நம்மை வருத்தி முயற்சிக்காமல், அவரின் அன்பில் இளைப்பாறலாம். நாம் அவருடைய அன்பில் இளைப்பாறும்போது, ​​அவருடைய அற்புதமான அன்பைக் கண்டு வியப்படைவதுமல்லாமல், எந்நிலையிலும் அவரை ஆராதிக்கும்படி அந்த அன்பு நம்மை ஏவுகிறது. மணவாளன் இயேசுவின் அன்பை நாம் ஆராதிக்கும்போது, ​​ சட்டதிட்டங்களின்படி பிரிந்து சுத்திகரிக்க வேண்டிய அழைப்பை காணமாட்டோம். மேலும், பரிசுத்தத்திற்கான அழைப்பு, தன் மணவாட்டியை யாரிடமும் பகிராத மணவாளன் இயேசுவினுடைய இருதயத்தின் வைராகியமான அன்பிலிருந்து துளிர்ப்பதை நாம் புரிந்துகொள்ளக்கூடும். கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார் (எபே. 5:27).  மேலும் நாம் படிக்கும்போது, நம்மை அவருடைய மணவாட்டியாக்கிக் கொள்வதற்கு அவர் ஒரு பெரிய விலைக்கிரயம் செலுத்தத் தயாராக இருந்ததை அறிவதன் மூலம், இவ்வுலகத்தின் அன்பிலிருந்து விடுபட்டு, இயேசுவின் விசுவாச மணவாட்டியாகும்படி நம்மை ஊக்குவிக்கிறது 

முடிவுரை

இறுதியாக, ஆண்கள் எல்லோரும் குறிப்பாக கணவர்கள், மணவாளன் இயேசுவின் இந்த இருதயத்தை கருத்தில் கொண்டு, இயேசுவின் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றி  தங்கள் மனைவிகளை நேசிக்கிறார்களா என்று தன்னை தானே ஆராய்ந்துக்கொள்ள வேண்டும் (எபே. 5:25). திருமணனாகதவர்களும் திருமணத்திற்கு ஆயத்தப்படுபவர்களும் கிறிஸ்தவ திருமணத்தின் அடிப்படையான உறுதிப்பாட்டை புரிந்துகொள்வதற்கு, நம் பரலோக மணவாளனின் இந்த முன்மாதிரியை நன்றாக கண்ணோக்கிப் பார்க்க வேண்டும். தேவன் உங்களை ஒரு கணவனாக அழைக்கும்போது, அவர் உங்களை இயேசுவைப் போல இருக்க வேண்டுமென்றும், உங்கள் மனைவிக்காக எப்போதும் பரிந்து பேசவும், தேவனுடைய வார்தையைக் கொண்டு அவளுக்கு அறிவுறுத்தவும், அவளை சுத்திகரிக்கவும், கிறிஸ்து உங்களை நேசித்ததைப் போல நிபந்தனையின்றி அவளை நேசிக்கவும், உங்கள் தெய்வீக முன்மாதிரியால் அவளை உற்சாகப்படுத்தவும், மற்றும் உங்கள் மணவாட்டியின் நன்மைக்காக எப்போதும் உங்களை தியாகம் செய்வதில் முதன்மையாக இருக்கவுமே அழைக்கிறார். 

இரண்டாவதாக, இயேசு நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, அனைத்து பரிசுத்தவான்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கபடியே அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (எபே.5:2; யோவா.15:12). மணவாளன் நம்மை நேசிப்பதைப் போல நாம் நம் சக விசுவாசிகளை நேசிக்கிறோமா? பரிசுத்தவான்களுக்காக எப்பொழுதும் பரிந்துபேசுவதன் மூலமும், தேவனுடைய வார்தையைக் கொண்டு அவர்களை சுத்திகரிப்பதன் மூலமும், கிறிஸ்து நம்மை நேசித்ததைப் போல நிபந்தனையின்றி அவர்களை நேசிப்பதன் மூலமும், மற்றவர்களின் நன்மைக்காக எப்போதும் நம்மை தியாகம் செய்வதில் முதன்மையாக இருப்பதன் மூலமும் நாம் அவர்களை நேசிக்கிறோமா?

இயேசுவுடனான நமது தனிப்பட்ட உறவு மற்றும் நெருக்கத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றமோ, நம் திருமணங்களில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றும் கணவர்களாக இருக்கவோ, சபையாக நாம் ஒருவரையொருவர் நேசிக்கவோ, இவ்வனைத்தையும் செயல் படுத்த,மணவாளன் இயேசுவினுடைய இருதயத்தின் அன்பின் வெளிப்பாட்டை நாம் பெற்றுக் கொள்வதே பிரதானமாக இருக்கிறது. இயேசுவின் இந்த இருதயத்தின் வெளிப்படுத்தும்படி கர்த்தரிடம் வேண்டுக்கொள்வோம். ஆமென்.

Transcribe done by: Priya Joe

yt subscribe
House of Prayer, Trivandrum
2.08K subscribers
Subscribe

Related Articles

Subscribe to our newsletter