பண ஆசையில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்

House of Prayer
Jun 22 · 1 minute read

சகோஜாஸ்லின்

1 தீமோத்தேயு 6:9-12

ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

மூன்று வார்த்தைகள் இங்கே குறிப்பிடத் தக்கது

1. விட்டோடி

2. நாடு

3. போராடு

அப்போஸ்தலனாகிய பவுல் திமோத்தேயுவிடம் மூன்று விஷயங்களை கூறுகிறார். இந்த உபதேசங்கள் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும், ஊழியத்துக்கு விசேஷமான அழைப்பை பெற்றவர்களுக்குமட்டும் உரியது அல்ல. தேவன் நாம் அனைவரையும் அவருடைய ராஜ்யத்திற்கு அங்கத்தினராய் அழைத்திருக்கிறார். வேறுவிதமாகச் சொன்னால் இந்த வார்த்தைகள் எனக்கும் உங்களுக்கும் உரியவை. பெரும்பாலும் ‘நிருபங்கள்’ என்று கேட்கும்போது, அவை போதகர்களுக்கு மட்டுமே என்று நினைக்கிறோம். ஆனால் அது நாம் எல்லாருக்கும் உரியவை. இந்த வார்த்தைகள் நாம் கிறிஸ்துவில் வளரவும், அவரைப் போல மாறவும் உதவி செய்யும். எனவே நாம் இந்த வசனங்களை ஜெபத்துடன் தியானிப்போம்.

9ம் வசனம் இவ்வாறாக தொடங்குகிறது “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள்”. கடவுள் நம்மை ஐசுவரியவான்களாக அழைக்கிறார் என்று சொன்னால், நாம் மிகவும் உற்சாகமாக இருப்போம். ஆனால் இங்கே வசனம், நாம் ஐசுவரியவான்களாக ஆசைப்படக் கூடாது என்று சொல்லுகிறது. நாம் கர்த்தருடைய இருதயத்தை அறிய வேண்டும் என்றால் பண ஆசைக்கு விலகி ஓட வேண்டும். இந்த உலக வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் அதிக பணம் சம்பாதிக்கவே ஆசைப்படுகிறோம். நம்முடைய ஜெபங்களும் வேலைகளும் அதையே பிரதிபலிக்கின்றன. இதை பார்க்கின்ற நம்முடைய பிள்ளைகளும், நல்ல வேலைக்கு செல்ல வேண்டும், வெளிநாடுகளுக்கு சென்று நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்பதயே விரும்புகின்றனர். இவை ஏதும் தவறில்லை. ஆனால் உலக மக்களைப் போல் நாம் எப்பொழுதும் பணத்தை நினைத்து வாழ தேவையில்லை. நாம் ஆவிக்குரிய ஜனங்கள் என்பதை உணர வேண்டும். தேவன் தன் திட்டத்தின்படி நாம் அனைவரையும் அழைத்திருக்கிறார். இந்த திட்டத்திற்காக நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை எப்போதும் நம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பணம் ஒரு பொருட்டு அல்ல. நம் பிள்ளைகளிடம், நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தால்தான் நல்ல கல்லூரியில் கற்று நல்ல வேலையில் சேரலாம் என்று தெரிந்தோ தெரியாமலோ அடிக்கடி சொல்லிக்கொடுக்கிறோம். இதன்மூலம் ஒரு நல்ல வேலை கிடைத்தால் எல்லாம் முடிந்துவிட்டது என்று நம் குழந்தைகள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவனை அறிவதை விட அல்லது தேவாலயத்திற்கு செல்வதை விட வேலை கிடைப்பது தான் முக்கியமாகிறது. தேவாலயத்திற்குச் சென்றாலும, “தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், உங்களுக்கு நல்ல வேலையைத் தருவார், உங்களுக்கு வீடு தருவார்” என்று தான் நாம் இன்னும் கேட்கிறோம். எத்தனை ஆசீர்வாதங்கள் கிடைத்தாலும், அது நம்மை தேவனிடம் நெருங்கவிடாமல் செய்தால் அது நமக்கு சாபமாகிவிடும். இந்த ஆசீர்வாதங்கள் நம்மை தேவனிடமிருந்து விலக்கினால், நாம் பெற்ற ஆசீர்வாதங்களை இழந்துவிடுவோம். எனவே பண ஆசை நம்மை சோதனையில் சிக்க வைக்கும். எலிகளைப் பிடிக்க ஒரு பொறியைப் பயன்படுத்துவது போல, பிசாசு பணத்தின் பேராசையால் நம்மை மயக்குவான். எனவே அன்பர்களே செல்வத்தின் பேராசை நமக்கு ஒரு பொறியாகும்.

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் நாம் திருப்தி அடைவதில்லை. எனவே பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தால், அது நம்மைச் சோதனையில் சிக்க வைத்து ஆபத்தில் தள்ளுகிறது. நம்முடைய ஜெபங்கள் எப்போதும் பணக்காரர் ஆகவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து கடவுள் நம்மை காப்பாற்றவேண்டும் என்றிருக்கவேண்டும். இதையே நம் பிள்ளைகளுக்கும் சொல்லவேண்டும். நாம் தேவாலயத்தில் இருக்கும்போது தேவன் உண்மையுள்ளவர் என்று கேட்கும்போது உற்சாகமடைகிறோம், ஆனால் நம் வீடுகளில் தேவன் உண்மையுள்ளவர் என்பதை பற்றி பேசுகிறோமா? அன்பானவர்களே, நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்பதை நம் குழந்தைகள் கவனிப்பார்கள். அவர்களை ஈர்க்க இந்த உலகில் பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அதற்கு நடுவில் தேவன் அவர்களுக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார், அந்த திட்டத்தை நிறைவேற்ற இந்த உலகின் எந்த அமைப்பும் தேவையில்லை என்பதை நாம் அவர்களுக்குச் கற்பிக்க வேண்டும். அவர்கள் தேவனை பின்பற்றினால், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர் தருவார். இந்த உலகத்தின் மக்களுக்கு இங்கே ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தான் விருப்பம். ஆனால் தேவனின் பிள்ளைகளாகிய நாம் தேவனின் இதயத்தின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அந்த விருப்பத்தை நிறைவேற்ற என்ன தேவையோ அது மட்டும் இருந்தாலே போதும். நமக்கு ஒரே ஒரு ஆசை இருக்க வேண்டும் – நம் தேவனின் சித்தத்தை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று. இந்த விருப்பம் நமக்குள் வெளிப்பட்டால், உலகில் நமக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று உணர்த்துக்கொள்ளுவோம். நமக்கான தேவனின் திட்டத்தை நாம் அடையாளம் கண்டு கொள்ளும்போது, ​​நமது வாழ்க்கைப் பயணம் ஒரு புதிய அர்த்தத்தைப் பெறுவதோடு, மேலும் நாம் தேவனிடம் நெருக்கமாக வாழத் தொடங்குவோம். நம்மில் பலர் பொருளாதார ரீதியாக சிரமப்படுகிறோம், ஆனால் இந்த பிரச்சனையை நாம் தேவனை நெருங்குவதற்கு ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும். நம் வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு முன்பு ஒரு தெரிந்தெடுத்தல் இருக்கிறது: ஒன்று தேவனின் விசுவாசத்தை பற்றியிருப்பது அல்லது இன்னும் கொஞ்சம் பணம் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று நினைப்பது. நாம் எதிர்கொள்ளும் கஷ்டங்களில் அவரையே நோக்கி, அவரை மட்டுமே சார்ந்திருப்போம்.

10ம் வசனத்தை பார்க்கும்போது, பண ஆசை நம்மை விசுவாசத்திலிருந்து விலக்குவதை காண்கிறோம். நமக்கு ஏற்படும் கஷ்டங்களில் தேவனை அதிகமாக நம்புவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். காலேபைப் போல நாமும் தேவனில் முழு நம்பிக்கையை வைப்போம். நாம் பெற்ற ஆசீர்வாதங்களுக்காக மட்டும் தேவனுக்கு நன்றி செலுத்துவதை விட, அதிகமாக நாம் தேவனிடம் நம்பிக்கை கொண்டால், நாம் இப்போது அவருக்குச் செய்வதை விட அதிகமாக அவருக்குச் ஊழியம் செய்ய தேவன் நம்மை அபிஷேகம் செய்வார். பிரியமானவர்களே, தேவனை நன்றாக அறிந்துகொள்ளவே அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

மத்தேயு 6:24ல் நாம் பார்க்கிறோம், “இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது”. இரண்டு எஜமான்களுக்கு நாம் ஒருபோதும் ஊழியஞ்செய்ய முடியாது என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் நாம் அவருடைய ஊழியர்கள். அதேபோல பணத்திற்கு ஊழியம் செய்தால் நாம் அதன் அடிமைகளாகிவிடுவோம். அவற்றுக்கிடையேயான வித்தியாசம் என்னவென்றால, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் அவர் நமக்குக் கொடுக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் நாம் பெற்ற ஆசீர்வாதங்களை நாம் விரும்பியபடி பயன்படுத்தலாம் என்று பிசாசு சொல்லுகிறான். இவ்வாறு, நாம் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் பெறத் தொடங்கும்போது, ​​மேலும் மேலும் பெற வேண்டுமென்று விரும்புகிறோம், இதனால் பணத்திற்கும் பிசாசுக்கும் அடிமையாகிறோம். தேவன் தந்த ஆசீர்வாதங்களை நம் கைகளில் வைத்து அவர் முகத்தைப் பார்த்தால், அவர் தந்த ஆசீர்வாதங்களை முழுமையடையச் செய்யலாம். செல்வமும் பிற ஆசீர்வாதங்களும் நம்மை நித்தியத்தின் இலக்கிலிருந்து விலக்கி அழைத்துச் செல்லுகிறது. தேவன் ஒருவரே நம்முடைய கர்த்தர் என்பதை பரிசுத்த ஆவியானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். இந்த பூமியின் பயணத்தில் தேவனை மட்டுமே பின்பற்றி வாழ்வோம், வேறு எந்த பொறியிலும் சோதனையிலும் சிக்காமல் கவனமாக இருப்போம்.

மாற்கு 10:17-24ல், ஒரு வாலிபன் இயேசு கிறிஸ்துவிடம் வருவதைக் காண்கிறோம். அவனுடைய குறைகளில் ஒன்றை இயேசு அவனிடம் சுட்டிக்காட்டுகிறார். இயேசு அவன் தவறைக் சுட்டிக்காட்டவே அதை சொன்னார் என்று நாம் நினைக்கலாம். ஒருவரிடம் குறையைக் கண்டால் நாம் அவர்களைக் குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் இங்கே இயேசு அவனை அன்புடன் திருத்துகிறார். அவ்வாறே, தேவன் நமது குறைகளைச் சுட்டிக் காட்டுவது நம்மை இழிவுபடுத்துவதற்காக அல்ல மாறாக நாம் முன்னேறிச் செல்ல உதவுவதற்காகவே. இங்கே அவனுடைய செல்வம்தான் அந்த மனிதனை இயேசுவைப் பின்பற்றவிடாமல் தடுத்தது. இதை குறித்து இயேசுவின் சீடர்களும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களும் செல்வம் என்பது தேவன் தரும் ஆசீர்வாதம் என்றும் எண்ணினர். பிற்பாடு இயேசு கிறிஸ்து, “ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது!” என்றார். இந்த சம்பவத்திலிருந்து, ஐசுவரியம் அல்ல மாறாக ஐசுவரியத்தின் மீது நம்பிக்கை வைப்பது தவறு என்பதை அறிந்து கொள்கிறோம். நம் ஜெபமெல்லாம் இந்த ஐசுவரியத்தின்மேல் நாம் எப்போதும் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று இருக்க வேண்டும்.

மத்தேயு 4:4ல் “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று சோதனையின்போது சாத்தானிடம் இயேசு கூறினார். இந்த உலகத்தில் வாழ பணம் தேவை தான். ஆனால் நாம் பணத்தை சார்ந்து இருக்காமல் தேவனுடைய வார்த்தையை சார்ந்து வாழவேண்டும். நாம் தேவனுடைய வார்த்தைகளை அனுதினம் தியானித்து அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்தால் நாம் ஐசுவரியத்தின் பின்னல் ஓடாமல் இருக்க முடியும். இப்படியே நாம் ஐசுவரியத்தின் மயக்கத்தை மேற்கொள்ள முடியும். ஜார்ஜ் முல்லரின் வாழ்க்கை நமக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு. இவர் தேவனுடைய விசுவாசத்தை நன்கு அறிந்த ஒரு மனிதர். இவர் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி வந்தார். அவருடைய மரணத்தின்போது அந்த அனாதை இல்லத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவருடைய சுயசரிதையில், கர்த்தர் எப்போதுமே உண்மை உள்ளவராக இருக்கிறார் என்று கூறியுள்ளார். அந்த அனாதை இல்லத்தால் அங்குள்ள பிள்ளைகளுக்கு ஒரு வேளை கூட தவறாமல் தக்க சமயத்தில் உணவு கொடுக்க முடிந்தது. இந்த தேவ மனிதர் ஒரு வருஷத்தில் வேதாகமத்தை நான்கு முறை படிப்பாராம். நாம் புதுவருஷத்தின் தொடக்கத்தில் அனுதின வேத வாசிப்பு திட்டத்தை தொடங்கி அதை வருஷத்தின் பாதியிலேயே மறந்துவிடுகிறோம். ஆனால் முல்லருக்கு வேதத்தை வாசிக்க அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை. ஒரு நாள் கூட தேவனுடைய வார்த்தைகளை வாசிக்காமலும் அவரை நம்பாமலும் இருக்கவில்லை. தேவனின் வார்த்தையானது முல்லரின் அனுதின தேவையாக இருந்தது. நாமும் இந்த அளவுக்கு சென்று தேவனுடைய மகிமையை பார்க்கும்படிக்கு தேவன் விரும்புகிறார்.

11 ஆம் வசனத்தில் “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு” என்று ஆவியானவர் சொல்கிறார். இந்த உலகம் இத்தகைய குணங்களுக்கு எந்த மதிப்பும் அளிப்பது இல்லை, ஆனால் பரலோகமோ இவைகளுக்கு அதிக மதிப்பை அளிக்கிறது. நாம் இந்த உலகத்தின் வார்த்தைகளுக்கு அல்ல பரலோகத்தின் சத்தத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். நம் மூலம் தேவனுடைய நீதி மற்றவர்களுக்கு வெளிப்படுத்தப்பட நாம் பாடுபட வேண்டும். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளே நாம் யார் என்பதை நிர்ணயிக்கும். அன்பர்களே, மற்றவர்கள் தேவனின் சாயலை உங்களிடம் பார்க்கிறார்களா? இல்லையென்றால், நாம் என்ன செய்தாலும் பிரயோஜனமில்லை. அவருடைய வார்த்தைகளை அறிந்து அதன்படி நடக்க தேவன்தாமே உதவி செய்வாராக.

நீதிமொழிகள் 11:5, 6 என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:

உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான். செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.

நீதி: நீங்கள் நீதியின் பாதையில் நடந்தால், அந்த வழி உங்களை கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்லும். நீங்கள் நீதியில் வாழும்போது, இழப்புகளும் துன்பங்களும் இருக்கும், ஆனால் கிறிஸ்துவைப் பிரியப்படுத்தவே இந்த நீதியின் பாதையைப் பின்பற்றுகிறோம். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகியா நாம் பதில் தேவைப்படும் நேரங்களில் அடிக்கடி அமைதியாக இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலைகளில் சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப் பின்பற்றுங்கள். உங்கள் சிலுவை உங்களை கிறிஸ்துவின் சாயலாக மாற்றும்.

தேவப்பக்தி: 1 தீமோத்தேயு 4:7, 8ல் கூறப்பட்டுள்ளதைக் காண்போம். தேவப்பக்தியில் எப்பொழுதும் வாழ வேண்டும் என்பதே தேவ பிள்ளைகளின் விருப்பம். நாம் தேவப்பக்தியில் வாழ வேண்டுமானால், நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்க வேண்டும், தியானிக்க வேண்டும், ஜெபிக்க வேண்டும். இதுதான் நமக்கு பயிற்சி. நிச்சயமாக நாம் தேவபக்திக்கான நேரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பிரியமானவர்களே, தேவப்பக்திக்காக நேரம் ஒதுக்குகிறோமா? தேவனுடைய வார்த்தையை தியானிக்க நேரம் கிடைக்கிறதா?

2 தீமோத்தேயு 4:7ஐப் பார்ப்போம்.

“நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”

அன்பர்களே, நாம் அனைவரும் ஒரு பந்தயத்தில் இருக்கிறோம். இந்த உலக மக்கள் தங்களுக்கென்று பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள் ஆனால் தேவனின் குழந்தைகளாகிய நாம் தேவனுடைய திட்டத்தில் வாழ்கிறோம். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல நிலைகளைக் கொண்டது. அந்த நிலைகளைக் கடந்து தேவனுக்கு உண்மையாக வாழ தேவன் நமக்கு உதவி செய்வாராக. நாம் பல கஷ்டங்கள் மற்றும் சிரமங்களை கடந்து செல்லும் போது, நம் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு உயர்த்தப்படுகிறோம், மேலும் எல்லா கஷ்டங்களுக்கும் எதிராக நம்பிக்கையுடன் போராடுவோம். பிறகு நாம் விசுவாசத்தோடு ஜெபிக்க ஆரம்பிப்போம், நம்முடைய ஜெபங்கள் ஆசீர்வாதமாக மாறும். நாம் தேவனின் குரலைக் கேட்போம், அதன் பிறகு நாம் அவருடைய வழிகளில் ஓடிவிட்டோம், நம் பந்தயத்தின் முடிவை அடைந்துவிட்டோம் என்பதை உறுதியாக நம்பலாம். பிரியமானவர்களே, நம்மில் பலர் பல கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் இந்த துன்பங்கள் என்றென்றும் தொடராது. எல்லா கஷ்டங்களை சமாளிக்கவும், நம்பிக்கையின் நல்ல போராட்டத்தை எதிர்த்துப் போராடவும் தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக. நாம் நன்றாகப் போராட வேண்டுமானால், அந்த நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். ஒரே உண்மையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன் என்று யோவான் 17:3 சொல்கிறது.

இறுதியாக, எரேமியா 9:24 மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் தேவனை அறிந்திருப்பதில் மகிழ்ச்சியடையச் சொல்கிறது. அதனால் தான் நித்திய ஜீவனைப் பற்றிக்கொண்டிருக்கிறோம். நாம் தேவனுக்கு உண்மையாக வாழும்போது நமது தெய்வீகம் பூரணமாகிறது. நாம் தேவனோடு நடக்கும்போதுதான், நம்முடைய எல்லா கஷ்டங்களும், ஆசீர்வாதங்களும் நம்மை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தும். தேவன் நம் ஒவ்வொருவருக்கும் இந்த நித்திய ஜீவனை பற்றிக்கொள்ளவும், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடவும் உதவுவாராக. ஆமேன்.

மொழிபெயர்த்தவர்: பொன்சிபா. வி

yt subscribe
House of Prayer, Trivandrum
2.08K subscribers
Subscribe

Related Articles

Subscribe to our newsletter