நெருக்கம் பொறுமையை உண்டாக்குகிறது

House of Prayer
Sep 22 · 1 minute read

நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ஊழியத்திற்கென்று அழைக்கப்பட்டீர்கள் என்பதற்கான முதலாம் ஆதாரம் என்ன? பிரச்சனை – உங்கள் தனிப்பட்ட மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கை புயலில் அகப்பட்டு மற்றும் புயலை எதிர்கொள்வது போன்றும் ஒரு தீய சுழற்சியில் சிக்கிக் கொள்வது போன்றும் தோன்றினால், உங்களுக்கு ஒரு அழைப்பு இருப்பதையும் தேவன் உங்களை அபிஷேகம் செய்துள்ளார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரும் அழுத்தம், ஊக்கமின்மை, நம்பிக்கையின்மை போன்றவற்றால் கீழே விழுந்தாலும், தான் இன்னும் நின்றுக் கொண்டிருப்பதன் மூலம் ஒரு அப்போஸ்தலன் காணப்படுகிறார். உங்களை சுற்றிலும் அநேகர் கீழே விழுந்தபோதிலும், நீங்கள் இன்னும் நின்றுக் கொண்டிருந்தால், தேவன் உங்களுக்காக ஒரு அழைப்பு வைத்திருக்கிறார்; தேவனையும், தேவனுடைய ராஜ்யத்தை மகிமைப்படுத்தும்படி நீங்கள் நிறைவேற்றுவதற்காக ஒரு நோக்கத்தை உங்களுக்கென்று மட்டுமே அவர் வடிவமைத்துள்ளார். ஆவிக்குரிய போரைப் பற்றி பவுல் சொன்னது இதுதான்.

எபேசியர் 6:13-14

ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

“தீங்கு நாள்” என்பது ஆவிக்குரிய தாக்குதலின் எந்த தருணத்தையும் குறிக்கிறது. தேவப்பிள்ளைகளாகிய நாம் இந்தப் போரை முறியடித்து வெற்றிச் சிறக்க வேண்டியது பிரதானமானது. கொந்தளிப்பான மற்றும் கடினமான காலங்களை கடந்த பிறகும், நீங்கள் இன்னும் நிற்கிறீர்கள் என்றால், அது தேவன் அளித்த வல்லமையால் மட்டுமே. ஆனால் உறுதியாக நிற்க, நேர்மை மற்றும் நீதி என்ற இரண்டு பண்புகளை நாம் கொண்டிருக்க வேண்டும். மனித இனத்தைச் சேர்ந்த நமக்கு எப்போதும் நேர்மையாகவும் நீதியாகவும் இருப்பது இயலாத காரியம். தேவன் மட்டுமே நமக்கு கிருபையளித்து நம்முடைய பழைய சுபாவங்களை எல்லாம் உடைத்தெறிந்து, தம்முடைய சாயலாக நம்மை மறுரூபமாக்க முடியும்.

யூதா 1:24,25

வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.”

தேவன் ஒருவரே நாம் வழுவாதபடி காக்கக்கூடும். சோதனைகளையும் நம்பிக்கையின்மையையும் வெல்லும் கிருபையை அவர் நமக்களிப்பார். ஆகையால், தேவனாலே, நாம் அவருடைய மகிமைக்கு முன்பாக பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் நிற்போம் (கொலோசெயர்1:21). அதுமட்டுமின்றி, அவர் நம்மை மிகுந்த மகிழ்ச்சியால் நிரப்புவார்.

தேவன் நம் கரத்தைப் பிடித்தால், அவர் அதைப் பற்றிக் கொள்வார். எந்தச் சூழ்நிலையிலும் அவர் கை விட மாட்டார் சில வேளைகளில், அந்தப் பிடி மிகவும் இறுக்கமாக அல்லது வலுவாக இருக்கும்; இதனால் வலி மற்றும் விரக்தி ஏற்படும். பெரும்பாலும், நாம் அவரது கையைப் பிடிக்க முயற்சி செய்கிறோம்; இதனால் நம் பிடி தளர்ந்து, நாம் இறுதியில் தனிமை ஆகிவிடுகிறோம். அவர் நம்மைப் பிடித்துக் கொள்வது, அது வலி அல்லது விரக்தியை ஏற்படுத்தினாலும், நாம் தனிமையாக இருப்பதை விட மிகவும் சிறந்தது.

தேவன் ஏன் இந்த புயல்களை நம் வாழ்வில் அனுமதிக்கிறார்?

சங்கீதம் 4:1

என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.”

இந்த வசனம் அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது; நீங்கள் துன்பத்தில் இருக்கும்போது, ​​அடுத்த நொடி தேவன் உங்களை விடுவிக்கிறார் என்று அர்த்தம் இல்லை. தாவீது திடீரென்று விபச்சாரம் மற்றும் கொலை – இவ்விரண்டு பாவங்களைச் செய்தபோது, ஒரு தடுமாற்றமான (தார்மீக மற்றும் ஆவிக்குரிய ரீதியாகவும்) நிலையிலிருந்தார் ஆனால், தேவன் ஒரு தீர்க்கதரிசியை அவரிடம் அனுப்பி, அவருடைய பாவங்களை வெளிப்படுத்தினார். உடனே, அவர்(தாவீது) குற்ற உணர்ச்சியாலும், துக்கத்தாலும் நிறைந்து, மனம் வருந்தினார். அப்போதும், அவர் செய்த செயல்களுக்கான விளைவுகளையும் நியாயத்தீர்ப்புகளையும் அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது. அவர் தனது சொந்த மகனான அப்சலோமுக்கு பயந்து தனது சொந்த வீட்டை விட்டு ஓட வேண்டியிருந்தது. அவருடன் அப்பம் பிட்டவர்களும் அவர் பின்னால் அவரைச் சபித்தும், பகைத்தும் ஓடினார்கள். உயிருக்குத் தப்பியோட வேண்டியிருந்ததாலும் மற்றும் பயங்கரமான அவமானங்களை அனுபவித்ததாலும், தாவீதுக்கு விசாலம் உண்டானது. தாவீது தன் உயிருக்காகத் தப்பியோடியபோதும், தேவன் தாவீதில் செயல் பட்டுக் கொண்டிருந்தார்; இதனால், தாவீதைப் பற்றி “தன் இருதயத்துக்கு ஏற்றவன்” என்று தேவன் சாட்சியளிக்கத்தக்க, அவர் தாவீதின் இருதயத்திற்கு ஒரு விசாலமுண்டாக்கினார். நெருக்கம் பொறுமையை உண்டாக்குகிறது. தேவன் நம்மைக்குறித்து இப்படி ஒரு சாட்சியளிக்க வேண்டுமென்றால், நாம் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழ முடியாது. ஒருவேளை இந்த நாளிலேயும் கூட, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு பயந்து நாம் மறைந்திருக்கலாம். அப்படியிருந்தும், தேவன் தன் கிருபையினிமித்தம் நம் கரங்களைப் பிடித்துக் கொண்டு, அதன்மூலம் நம்மை உறுதியாக நிற்க செய்கிறார். நாம் இப்போது கடந்து செல்வது, நமது சொந்த செயல்களின் விளைவுகளாகத் தான் இருக்க வேண்டும்; அதை நமக்கு எதிராக பயன்படுத்துவதற்கு பதிலாக, தேவன் அதை நமக்காகப் பயன்படுத்துகிறார்; அதனால் அவர் நம் இருதயத்தை விசாலமாக்கி மேலும் நம்மை “அவருடைய சொந்த இருதயத்திற்கு ஏற்றவர்கள்” என்றும் அழைக்கிறார்.

நாம் தோல்விகளை கடந்து செல்லும்படி தேவன் அனுமதித்துள்ளார். துக்கத்தின் பள்ளத்தாக்கில் நடக்கும்படி அவர் நம்மை அனுமதித்துள்ளார். அனுதினமும், குடும்பங்கள் மற்றும் வீடுகளுக்கு எதிராக, குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஆவிக்குரிய தாக்குதல் உள்ளது. பொறுமையின்மை, தான் என்னும் அகங்காரம், நேர்மையின்மை, சரியான உரையாடலின்மை, ஒருவரையொருவர் சாதாரணமாக எடுத்துக்கொள்வது மற்றும் பல வழிகளில் – இவை வெளிப்படுகின்றன. தேவன் அறியாமல் இது நடக்கவில்லை என்றாலும், இறுதியில், நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பெரிய நோக்கம் இருக்கிறது. குடும்பங்களையும் வீடுகளையும் சரி செய்து, அதனால் அவருடைய பிள்ளைகள் அவருடைய மகிமைக்காக பயன்படுத்தப்படும்படி, சபையை தேவன் அழைக்கிறார். பெரும்பாலும், நாம் ஆவியில் ஊக்கமற்று உணர்கிறோம்; அவருடைய நோக்கத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை; நமக்கு அழைப்பு இருக்கிறதா என்று கூட சந்தேகிக்கிறோம். ஆனால் அந்த நேரத்தில், தேவன் நம்மைப் பயன்படுத்தி மற்றவர்களின் காயங்களை ஆற்றுவார். நாம் காயப்படுகிறோம் என்பதை உணர்வதினால், மற்றவர்களின் காயங்களை ஆற்றக்கூடும் என்று தேவன் விரும்புகிறார். உங்கள் வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கும் ஒவ்வொரு புயலுக்கும் ஒரு காரணமும் திட்டமும் உள்ளது; அதனால் நீங்கள் வெட்கப்படுபடி அல்ல; மாறாக, அவர் உங்கள் இருதயத்தை விசாலமாக்குவார்; புயலைச் சமாளிக்க உதவுவார்; மற்றவர்களைக் குணப்படுத்தும்படி உங்களைப் பயன்படுத்துவார். குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டால், அது பிரிந்திருந்தாலும் அல்லது விவாகரத்து செய்திருந்தாலும், அது அவமானம். சகலவிதமான துஷ்பிரயோகம் மற்றும் தொடர்ச்சியான சண்டைகளைப் பார்ப்பது குழந்தைகளை பாதிக்கிறது; அப்போதும் கூட, தேவன் இந்த குழந்தைகளை வல்லமையான வழிகளில் பயன்படுத்துகிறார்.

இந்த விசாலம் எவ்வாறு கொண்டு வரப்படுகிறது? நம் தோல்விகளை ஒப்புக்கொண்டு மனந்திரும்ப வேண்டும் (நம் பாவத்தை கைவிட்டு, அதிலிருந்து திரும்ப வேண்டும்). பல ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு அநீதி இழைத்தவர்களை நாம் மன்னித்திருந்தால், அது அவர் நம் இருதயத்தை விசாலப்படுத்தியதற்கான அறிகுறியாகும். இல்லை என்றால் இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

உபாகமம் 8:15-16

உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும்; உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து,;”

தேவன் தாமே அவர்களுக்கு தண்ணீரையும் மன்னாவையும் கொடுக்கும்பொருட்டு, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் இஸ்ரவேலர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் நம்மில் யாருக்கும் தேர்வுகள் பிடிக்காது. ஆனால், தேர்வு நடத்துவதன் மூலமே நாம் தரம் பெற முடியும். தேவன் நம்மைச் சிறுமைப்படுத்திச் சோதிக்கிறார், அதனால் இறுதியில், தம் சித்தத்தின்படி நம்மை உயர்த்துவார். தேவன் இஸ்ரவேலரைச் சிறுமைப்படுத்திச் சோதித்தாலும், அவர் திட்டமிட்டு வைத்திருந்த பலன் பெரியது. இஸ்ரவேலர்கள் உண்ணுவதற்கும் தேவனுக்கு எதிராக முறுமுறுப்பதற்கும் தங்கள் வாயைத் திறந்தபோது, ​​அவர்கள் மிகவும் தோல்வியடைந்தனர். இதன் காரணமாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதபடித் தடைசெய்து தேவன் அவர்களைத் தண்டித்தார். சோதனைகள் நம்மை சோதித்து தாழ்மை படுத்துகிறது.

சங்கீதம் 102:23

வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.”

பல சமயங்களில், நாம் தேவனிடம் பெலனை கேட்கும் பொழுது, ​​தேவன் நம்மிடம் “உண்மையாகத்தான் அதைச் சொல்கிறாயா?” என்று கேட்பார். நாம் பலவீனமாக தாழ்த்தத் தயாராக இருந்தால் (தேவனை முழுமையாகச் சார்ந்திருத்தல் மற்றும் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தல்), அவர் நம்மைக் குணப்படுத்துவார். இப்பொழுதெல்லாம், நாம் நோய்வாய்ப்பட்டால், மருத்துவமனைக்குச் சென்று, ஒரு மருத்துவ நிபுணரை அணுகி, மருந்துகளை எடுத்துகொள்ள முடிகிறது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு, விசுவாசத்தை மட்டுமே தங்கள் சொத்தாகக் கொண்டு ஊழியத்தைத் தொடங்கிய தேவப் பிள்ளைகள் இருந்தனர். ஒவ்வொரு உணவிற்கும், ஒரு நோயைக் குணப்படுத்துவதற்கும், தேவப் பிள்ளைகள் – ஆண்கள் மற்றும் பெண்கள், முழுவதுமாக தேவனையேச் சார்திருந்தார்கள்; அவர்களின் வங்கி இருப்பையோ மற்றும் மருத்துவ காப்பீடுகளையோ அல்ல. அவர்களில் சிலர் தேவனுடன் இருக்கச் சென்றாலும், அவர்களில் பெரும்பாலோர் கடுமையான நோய்களிலிருந்து பிழைத்து குறிப்பிடத்தக்க நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில், ஒவ்வொரு நோயும் நம்மை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வாகனமாக கருத வேண்டும். மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தின் மூலம் ஆயத்தப்படுவதின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ள இது நம்மைத் துாண்டுதல் செய்கிறது.

2 கொரிந்தியர் 12:9

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்”

தேவன் மீது முழு நம்பிக்கை வைத்து துன்பங்களைச் சகிக்க நீங்கள் தயாரா? அவருடைய கிருபை நமக்குப் போதும் என்று தேவன் வாக்களித்துள்ளார்; எத்தகைய துன்பத்தையும் சகிப்பதற்கு அவருடைய கிருபை போதுமானது. சோதனைகளைச் சகிக்க நாம் தயாராக இருந்தால், அவர் தனது பெலத்தையும் வல்லமையையும் நமக்குத் தருவார். உங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது அவர் உங்களை பூரணமாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

2 கொரிந்தியர் 12:5

இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.”

உங்கள் பலவீனங்களைக் குறித்து மேன்மைபாராட்டுவதை மறந்து விடுங்கள்; நம்மில் எத்தனை பேருக்கு நமது பலவீனங்களை ஒப்புக்கொள்ள தைரியம் இருக்கிறது? நம்மில் அநேகருக்கு இல்லை; ஏனெனில், பலவீனத்தை அவமானத்தின் அடையாளமாக காண்கிறோம்; மக்கள் நம்மை குறித்தும் நாம் ஆராதிக்கும் தேவனை குறித்தும் என்ன நினைப்பார்கள் என்று நாம் பயப்படுகிறோம். நாம் கரங்களை விரித்து ஜெபிக்கும்போது, ​​நமது கரங்கள் தூய்மையாகவும், களங்கமில்லாதவையாகவும் இருக்கிறதா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். முதல் படி நமது பலவீனங்களை ஒப்புக்கொள்வது – அது அடக்கி வைக்கப்பட்ட கோவம் அல்லது தீராத காயம், எதுவாகவும் இருக்கலாம்; இந்த பலவீனங்கள் கவனிக்கப்படாமற்போனால், அது பல வழிகளில் வெளிப்பட்டு நம் வாழ்க்கையை அசிங்கமாக்கிவிடும். பிறகு, நம்முடைய நற்சீருடன் கூட மோசமான விஷயங்களையும் – நமது பலவீனங்களையும், தேவனிடம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

மனைவிகளே, உங்கள் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்- உங்கள் வீட்டின் தலைவர்; மற்றவர்களுக்கு முன்னால் அவர்கள் தலையை உயர்த்துங்கள். அது உங்களுடைய பொறுப்பு. அத்தகைய மனைவிகளை “திறமையானவள், புத்திசாலி மற்றும் நல்லொழுக்கமுள்ள குணசாலி” என்று வேதம் குறிப்பிடுகிறது. புருஷர்களே, தேவன் தம்முடைய பிள்ளைகளில் அன்புகூருவது போல, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள் – அகபே (Agape) – (தன்னலமற்ற, தியாகம் நிறைந்த மற்றும் நிபந்தனையற்ற அன்பு). நாம் ஒருவரை நேசிக்கும் போது பதிலுக்கு எதையும் பெறாவிட்டால், ​​அது வலியையும், வேதனையும் அளிக்கிறது. எனினும், தேவன் நம்மை தன்னலமின்றி, தியாகம் நிறைந்து, நிபந்தனையின்றி நேசித்ததினாலேயே, நாம் இங்கே இருக்கிறோம்.

yt subscribe
House of Prayer, Trivandrum
2.08K subscribers
Subscribe

Related Articles

Subscribe to our newsletter