தேவன் தரும் வரங்கள்

பிறந்தது முதல், நாம் ஒவ்வொருவரும் நம் பிறந்தநாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிறந்தநாள் அன்று கடிகாரம் நள்ளிரவு 12 மணியை கடந்த பிறகு அடுத்த நாள் வந்துவிடும், எனவே மற்றொரு பிறந்தநாளுக்காக இன்னும் ஒரு வருடம் ஆவலோடு காத்திருக்கிறோம். நாம் பரிசுகளை நம் பிறந்தநாட்களில் எதிர்பார்ப்பதால் நமக்கு அது ஒரு சிறப்பான நாளாகும்.

எபேசியர்4:4-8ல்

உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விசுவாசியும் ஒரே கிருபையால் ஒரே விசுவாசத்தின் மூலம் ஒரே இரட்சகரால் இரட்சிக்கப்படுகிறார்கள். இந்த காரணத்திற்காக தேவன் நம் ஒவ்வொருவருக்கும் வரங்களை தருகிறார், நம்மில் ஒரு சிலருக்கு மட்டும் அல்ல இந்த ஆவிக்குரிய வரங்கள் மாறாக அனைவருக்கும் தருகிறார். ஆனால் “எல்லாருக்கும் ஒரே அளவு பொருந்தாது”, இவை தேவனால் வடிவமைக்கப்பட்டவை, ஒவ்வொருவருக்கும், அவருடைய நோக்கத்திற்கு ஊழியம் செய்வதற்காக. கிறிஸ்துவின் உடலின் உறுப்புகளாக இருக்கிறோம், அவர் தலையாக செயல்படுகிறார், நம்மில் சிலர் கண்களாகவும், சிலர் காதுகளாகவும், சிலர் கைகளாகவும் பணியாற்றுகிறோம். நமது செயல்பாடுகள் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், நாம் அனைவரும் ஒத்திசைந்து செயல்படும் போது மட்டுமே உடலால் இயங்க முடியும். நாம் ஒழுங்காகச் செயல்படவும் அவருடைய ராஜ்யத்திற்குப் பங்காளிகளாக இருப்பதற்கு அவருடைய கிருபை இன்றியமையாதது.

1 கொரிந்தியர்12:4-6

வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

ஆவிக்குரிய வரங்கள் என்பது தேவனால் மட்டுமே வழங்கக்கூடிய ஒன்று. இவை மாம்சத்திலிருந்து வந்தவை அல்ல, மாறாக தேவனிடத்திலிருந்து வந்தவை. நம்முடைய வரங்கள் வித்தியாசமாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசமாயிருந்தால் மட்டுமே நாம் இவற்றைப் பெற முடியும். மேலும் அவர் அருளிய கிருபைகளால் மட்டுமே இந்த வரங்களைப் பயன்படுத்த முடியும்.

யாக்கோபு1:17

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

தேவன் வரங்களைக் கொடுப்பவர். உலகமயமான பரிசுகள் மாறுவது போல் அவனுடைய வரங்கள் மாறாது அல்லது மறைந்துவிடாது. மாற்றங்கள் நிறைந்த வாழ்க்கையில் நிலையானதாக இருக்கும் வரங்கள், தேவனுடைய வரங்கள் மட்டுமே.

1 பேதுரு4:10-11

அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

பயன்படுத்துவதற்காக வரங்கள் வழங்கப்படுகின்றன. வரங்கள் கொடுக்கப்பட்டாலும் பயன்படுத்தப்படாமல் இருந்தால், உங்களிடமிருந்து தேவனின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு வரத்தை பெறுவதற்கான நோக்கத்தை அது தோற்கடிக்கிறது. பொருள் சார்ந்த வரங்கள் நம் சொந்த நலனுக்காகப்

பயன்படுத்தப்படுகின்றன, அதே சமயம் ஆவிக்குரிய வரங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யவும் உதவவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும்போதுதான் நாம் தேவனுக்கும் அவருடைய ராஜ்யத்துக்கும் மகிமையைக் கொண்டுவர முடியும். இந்தப் வரங்களை பயன்படுத்த, நம்முடைய வார்த்தைகளும் செயல்களும் பரிசுத்தத்தை பிரதிபலிக்க வேண்டும்; நம் வாழ்க்கை நாம் ஆராதிக்கும் தேவனை பற்றி பேச வேண்டும். அப்போதுதான், நோக்கம் நிறைவேறும், அவருடைய நாமம் மகிமைப்படும். ஆனால் இந்த பரிசுகள் என்னென்ன?

ரோமர்12:6-8

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதாலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

1 கொரிந்தியர்12:8-10

எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.

எபேசியர்4:13

அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.

தேவன் சபைகளுக்கு வரங்களை கொடுத்திருக்கிறார் அவை,

1) நிர்வாகம் (கேப்டன் கப்பலை வழிநடத்துகிறார்)

2) தலைமைத்துவம் / போதகர் (மக்களை ஒரு இலக்கை நோக்கி வழிநடத்துதல்)

3) அப்போஸ்தலத்துவம் (அணுக முடியாத மக்களுக்கு வார்த்தையின் விதைகளை விதைத்து பரப்புதல்)

4) பகுத்தறிவு (தேவன், சாத்தான், உலகம் மற்றும் மாம்சத்தின் குரலை அடையாளம் கண்டு வேறுபடுத்துதல்)

5) சுவிசேஷம் (இழந்தவர்களை அடைய)

6) உபதேசம் (ஊக்குவித்தல்)

7) விசுவாசம்

8) கொடுத்தல்

9) குணப்படுத்துதல்

10) பற்பல பாஷைகளைப்பேசுதல்

11) பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் (வெளிப்படுத்துதல்)

12) அறிவு

13) இரக்கம்

14) அற்புதங்கள்

15) தீர்க்கதரிசனம்.

“நிராகரிக்கப்படுதல்“மற்றும் “என்ன ஆகும் ” என்ற பயம் மக்களை அணுகுவதற்கும் சுவிசேஷத்திற்கும் தேவனை பற்றி பேசுவதற்கும் நம்மைத் தடுக்கிறது. விசுவாசத்தின் வரத்தைப் பெற்றவர்கள் தேவன் அற்புதங்களைச் செய்வார் என்று உறுதியாக நம்புகிறார்கள். அனைத்து வரங்களும் விசுவாசத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன, ஆனால் குணப்படுத்துதல் மற்றும் அற்புதங்கள் செய்யும் வரங்கள் தேவனின் இறையாண்மையின் விருப்பப்படி செயல்படும். தேவன் விரும்பினால் மட்டுமே இந்த வரங்களை பயன்படுத்த முடியும். அற்புதங்கள் தேவனின் வாசஸ்தலம், மகிமை மற்றும் வல்லமையை வெளிப்படுத்துகின்றன. குணப்படுத்தும் வரம் ஏன்? தேவனை அறியாத மக்களை அவரிடம் கொண்டுவரவேண்டும், அதனால் அவர்கள் தேவனின் வல்லமையை அனுபவித்து பார்க்க வேண்டும். கிருபையின் வரத்தை பெற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இரக்கம் காட்டுவார்கள்.

ரோமர்12:6

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.

ரோமர்12:11

“அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.”

இந்த வரங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படும்போதுதான், திருச்சபை வளர்ச்சியடையும். நம்மில் பலர் தேவன் தந்த வரங்களைப் பயன்படுத்தாமல் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளில் கலந்து கொள்கிறோம். நமது வரங்களைக் கண்டறிய, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் செய்ய வேண்டும், மேலும் நாம் தேவனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய வரங்களைப் பெற்றவுடன், நாம் அதை வளர்த்து, அதைப் பயன்படுத்த அவருடைய ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும். நாம் வரங்களை அளிப்பவரை நோக்கி பார்க்க வேண்டும், வரங்களை அல்ல; நமது வார்த்தைகளும் செயல்களும் அவருக்கு மகிமை சேர்க்க வேண்டும். விசுவாசிகளான நாம் ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவைகளைப் பெற்று பரிசுத்தமாக வாழ தேவன் உதவி செய்வாராக ஆமென்.

மொழிபெயர்த்தவர்.

பொன்சிபா. வி