தேவனுடைய வாக்குத்தத்தங்களின் நோக்கம்

2 பேதுரு 1:3-4ல், “தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த இரண்டு வசனங்களில் உள்ள இரண்டு பொதுவான விஷயங்கள் என்னவென்றால், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்துமே தேவனிடமிருந்துதான் வந்ததென்றும், அவராலேதான் கொடுக்கப்பட்டது என்பதாகும்.

யாக்கோபு 1:17ல் “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அவர் நமக்கு எவைகளை தந்துள்ளார்?

 1. ஆவிக்குரிய வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் அவருடைய தெய்வீக வல்லமையினால் நமக்குத் தந்துள்ளார்.
 2. தமது மிகப் பெரிய மற்றும் விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களை அவர் நமக்கு அளித்துள்ளார்.

தேவனுக்கு, நாம் அவரது தெய்வீக தன்மையில் பங்குள்ளவர்கள் ஆகவேண்டுமென்ற ஒரு குறிக்கோள் உண்டு. ஒரு பெரிய நோக்கத்திற்காக தேவன் தமது ஆசீர்வாதங்களை நமக்கு அளித்திருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக நாம் மிகக் சிறிய குறிக்கோள்களை மட்டுமே கொண்டிருக்கிறோம். உதாரணமாக, இந்த உலக வாழ்க்கையை கஷ்டமில்லாமல் கழித்து எப்படியோ பரலோகத்தில் ஒரு இடம் கிடைத்தால் போதும் என்று வாழ்கிறோம்.

அவர் கொடுப்பவைகளுக்கு ஒரு நோக்கம் உள்ளது:

 1. அவருடைய தெய்வீக வல்லமையானது நமது தெய்வீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளது என்று 3-ஆம் வசனத்தில் பார்க்கிறோம். வாழ்க்கையும் தெய்வீகமும் இரண்டு பிரிவுகள் அல்ல. அதாவது ஆறு நாட்கள் “உலக வாழ்க்கையும்” ஒரு நாள் தெய்வீக வாழ்க்கையும் என்று அல்ல. அப்படியானால் தெய்வீக வல்லமை என்றால் என்ன? அது பரிசுத்த ஆவியினால் நமக்குப் பகிரப்பட்ட உயிர்த்தெழுதலின் வல்லமை. “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல என்று ரோமர் 8:9ல் எழுதப்பட்டுள்ளது
 2. நான்காம் வசனத்தில், மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடபட்டுள்ளது. நாம் பூமிக்குரிய காரியங்களுக்கு வாக்குறுதிகளை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம். எபேசியர் 1:3ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்றுப் போடப்பட்டுள்ளது. தேவன் அவருடைய வார்த்தைகள், ஆசீர்வாதங்கள் மற்றும் வாக்குறுதிகளுக்கு ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். அது அவருடைய சாயலில் பங்கெடுப்பதற்காக என்று பேதுரு கூறுகிறார். நாம் தேவனின் சாயலில் படைக்கப்பட்டிருந்தாலும், பாவம் நம்மை ஆதாமின் சாயலுக்கு மாற்றியது. ஆனால் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவையும், அவருடைய உயிர் மற்றும் இரத்தத்தின் மூலமாக இரட்சிப்பையும் கொடுத்தார். அவர் நம்மை மீட்டு, அவருடைய குமாரனின் சாயலுக்கு நம்மை மாற்ற விரும்புகிறார்.

இலக்குடன் ஒரு பயணம்

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது குறிப்பிட்ட ஒரு இலக்கைக் கொண்ட பயணமாகும். இலக்கு இல்லாமல் பயணித்தால், நாம் நமது பொன்னான நேரத்தை வீணடிக்கிறோம். பயணம் எப்பொழுதும் சுகமாக இருப்பதில்லை, நிறைய சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் மகிழ்ச்சியான பகுதி எதுவென்றால், அவைகள் நம்மை ஒரு இலக்குக்கு அழைத்துச் செல்கிறது என்பதாகும். நம்முடைய பிரச்சனை என்னவென்றால், நாம் எப்போதும் இந்த பயணத்திலும் அதன் வசதிகளிலும் அதிக கவனம் செலுத்துகிறோமேயொழிய நம் இலக்கில் அல்ல. இதனால் பதற்றம், போட்டி, விரக்தி போன்ற முடிவுகள் ஏற்படுத்துகின்றது. பயணமே நமது இலக்காக மாறினால், அது நம்மை மிகவும் துக்கமான நிலைக்கு கொண்டுசெல்லும்.

கடைசி காலத்தை குறிக்கும் இயேசுவின் வார்த்தைகள்

லூக்கா 17, 26 முதல் 28 வரை உள்ள வசனங்களில் “நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. உண்ணுதல், குடித்தல், திருமணம் செய்தல், வாங்குதல், விற்றல், நடுதல் மற்றும் கட்டுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுப்பட்டனர் என்பதில் தவறேதும் இல்லையே. அப்படியென்றால் அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?

 1. அவர்களின் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் மறந்துவிட்டார்கள்.

இன்றைய உலக வாழ்க்கையை முக்கியப்படுத்தி நித்திய வாழ்வுக்குரியவைகளை புறக்கணித்தார்கள். 1 பேதுரு 2:9-யில் நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது.

 1. வாழ்க்கைப் பயணத்தில் கவனம் செலுத்தி தங்கள் இலக்கை மறந்துவிட்டார்கள்.

உதாரணமாக, எகிப்திலிருந்து வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேலர் செல்லும்போது, அடிப்படையாக இரண்டு வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டன:

1) நான் உன்னை எகிப்தின் அடிமைதனத்திலிருந்து விடுவிப்பேன்.

2) நான் உன்னை பாலும் தேனும் ஓடும் தேசத்திற்கு அழைத்துச் செல்வேன்.

முதல் பகுதி சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. செங்கடலைக் கடந்தது, எதிரிகளை அழித்தது, மன்னா, காடை, மேகஸ்தம்பம் மற்றும் அக்கினிஸ்தம்பம் போன்றவைகள். அவர்கள் சவால்களை எதிர்கொண்டபோது, முதல் பகுதியை நிறைவேற்றிய தேவன், வாக்குறுதியின் இரண்டாம் பகுதியையும் நிறைவேற்றுவதற்கு உண்மையுள்ளவர் என்பதை மறந்துவிட்டார்கள். இதன் விளைவாகத் தான் நம்பிக்கையின்மை, சந்தேகங்கள் மற்றும் எரிச்சல்கள். அதனால் பெரும்பான்மை ஜனங்கள் இலக்கை சென்று அடையவில்லை. பன்னிரெண்டு உளவாளிகளில் பத்துபேர், “வாக்களிக்கப்பட்ட தேசம் நல்லது, ஆனால் நம்மால் அங்கு செல்ல முடியாது” என்று கூறினார்கள். வாக்குத்தத்தம் சிறப்பும், தெய்வீகத்தன்மையும் கொண்டது. ஆனால் நாம் சாதாரண மனிதர்கள், நம்மால் அது இயலாது என்றனர். இருவர் மட்டுமே (யோசுவா மற்றும் காலேப்) இலக்கான கானான் தேசத்தில் கவனம் செலுத்தி, அது “சாத்தியம்” என்று கூறினார்கள். பவுல், 1 கொரிந்தியர் 10:11ல் “இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது”என்று கூறி நம்மை எச்சரிக்கிறார்.

நமக்கான அறிவுரை என்னவென்றால், சவால்கள் அல்லது சிரமங்கள் நம்மை ஒருபோதும் இலக்கை அடைவதற்கு தடை செய்யக்கூடாது. அவை வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். தேவன் நாம் இலக்கை அடைவதற்காகவே சகலத்தையும் நன்மைக்காக செய்கிறார் என்று பவுல் கூறுகிறார். ரோமர் 8:28ல் “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்”என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வசனம், இப்போதைய வேலையை இழந்தால், அதிக சம்பளத்தில் வேறு வேலை வரும் என்று சொல்லவில்லை. ஆனால் இந்த வசனம், 29 ஆம் வசனத்துடன் தொடர்புடையது. அந்த இலக்கு தேவனுடைய குமரனின் சாயல் அல்லது குணாதிசயத்துடன் அடையாளப்படுத்துவதாகும். அதைத்தான் அவருடைய தெய்வீக தன்மையின் பங்காளிகள் என்று பேதுரு கூறுகிறார்.

ஒழுக்கமா அல்லது குணாதிசயமா?

தொடர் பயிற்சியின் மூலம் ஒழுக்கத்தை வளர்க்கலாம். அரசாங்கமும் கூட பணியாளர்களின் செயல்திறன் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கின்றனர். தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், வாடிக்கையாளர்களுடன் எப்படி நன்றாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். வீட்டிலிருந்து அவர்களுடைய துணைவருடன் பெரிய சண்டைக்குப் பிறகு வேலைக்கு வந்தாலும், அவர்கள் மற்றவர்களுக்கு முன் நன்றாக நடந்து கொள்ளுவார்கள். ஆனால் அவர்களுக்குள் கோபமும் விரக்தியும் இருக்கும். அவர்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டாலும், ஆலயத்தில் வரும்போது மோசமான சாட்சியாக வெளிப்படக்கூடாது என்று பயந்து நன்றாக நடந்துகொள்கிறார்களே. ஆனால் தன்மை அல்லது குணம் உள்ளிருந்து வருகிறது. அதற்கு உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் உதவி தேவை.1 கொரிந்தியர் 3:18ல் “ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்” என்று எழுதப்பட்டுள்ளது. இது பரிசுத்த ஆவியின் செயல்பாடு. சிலர், என் குணத்தை என்னால் மாற்ற முடியாது, அது என் அப்பா அல்லது தாத்தாவிடமிருந்து பெற்றேன் என்பார்கள். அதற்கு தீர்வு பரிசுத்த ஆவியானவரின் ஆளுமையை ஏற்றுக்கொண்டு அவருடைய அதிகாரத்திற்கு அடிபணிவதே.

ஒரு சிற்பி, ஒரு கல்லை சிறந்த கலைவண்ணமாக மாற்ற முடியும். எப்போது என்றால், அந்த கல் அந்த சிற்பியின் அதிகாரத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்தால் தான். அந்த கல்லின் சரியான சமர்ப்பணம் இருந்தால், அவர் எப்போது வேண்டுமானாலும் கல்லை துளையிடலாம், வடிவமைக்கலாம் அல்லது வெட்டலாம். நம் வாழ்க்கையில் போராட்டங்களை அனுமதிப்பதில் தேவனுக்கு ஒரு நோக்கம் வைத்துள்ளார். ஒவ்வொரு சோதனையும் ஒரு உயர்வுக்கானது. யாக்கோபு 1:12ல் “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” என்றுகூறப்பட்டுள்ளது. யாக்கோபு 1:3ல் எங்கள் விசுவாசத்தின் பரீட்சை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நம் விசுவாசத்தை எப்படி சோதிக்க முடியும்? கேள்விகளால் அல்ல, சோதனைகள் மூலமாகத் தான். சோதனைகளை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்.

எப்பொழுதும் இரண்டு வழிகள் நமக்கு முன் இருக்கிறது.

 • சோதனைகளிலிருந்து நம்மை விடுவிக்க தேவனிடம் வேண்டலாம்

நாம் சில சமயங்களில் சொல்கிறோம், நம்மை போல் யாருக்கும் இதுபோன்ற சோதனைகள் இல்லை என்று. ஆனால் அப்படி அல்ல. வேறு சிலர், இந்த பிரச்சனை முற்றிலுமாக மாறினால் தான் நான் தேவனுக்காக முழுமையாக அர்பணிக்கமுடியும் என்று சொல்லுவார்கள், இல்லை! ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் வந்துகொண்டு தான் இருக்கும்.

 • யோவான் 12:28-யில் இயேசு ஜெபித்தபடி ஜெபிக்கலாம் (உமது நாமம் மகிமைப்படட்டும்)

இலக்கை அடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

2 பேதுரு 1:4ன் படி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பிக்க விருப்பம் கொள்ளவேண்டும். சபைகள், குடும்பங்கள் உட்பட எல்லா இடங்களிலும், தீய ஆசைகள் சிதைவைக் கொண்டுவருகின்றன. இதனால் ஒழுக்கக்கேடுகள், பொறாமை, போட்டிபோன்ற தீமைகள் நிகழ்கின்றன. இது மாற, சுயம் அல்லது மாமிசம் முற்றிலுமாக அழிய வேண்டும். யோவான் 12:24ன் படி “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்”. கோதுமைமணி ஒரு அழகான ஜாடியில் வைக்கப்பட்டால் அது பல ஆண்டுகளாக அங்கேயே இருக்கும. ஆனால் நிலத்தில் விழுந்து சாகும்போது தான் அது பலனை கொடுக்கும். 2 தீமோத்தேயு 2:11ல் “இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்” என்று எழுதப்பட்டுள்ளது. “சுயம் சிலுவையில் இருந்தால், கிறிஸ்து நம் இருதயத்தின் சிம்மாசனத்தில் இருப்பார், சுயம் சிம்மாசனத்தில் இருந்தால், கிறிஸ்து சிலுவையில் இருப்பார்”.

பேதுரு 1: 5-8ல் “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது”. என பார்க்கிறோம்.

இலக்கை அடைய 8 குறிப்புகள்:

 1. விசுவாசம்: எபிரெயர் 11:6ல், விசுவாசம் அடிப்படையானது என கூறப்பட்டுள்ளது.
 1. தைரியம்: பாவத்துக்கு ஏதுவான சோதனையின்போது, சரியானதை மட்டும் செய்ய வேண்டிய தைரியம் வேண்டும். இயேசு நம்மிடம் தோன்றி ” என் தன்மை உங்களுக்கு வேண்டுமா அல்லது பிசாசின் தன்மை தேவையா?” என்று கேட்டால், நிச்சயமாக நாம் இயேசுவின் தன்மை மட்டுமே வேண்டும் என்று சொல்லுவோம். நாம் பாவம் செய்ய முற்படும் போது, கர்த்தராகிய இயேசு அதே கேள்வியை நம்மிடம் கேட்கிறார். நம் பதில் என்னவாக இருக்கும்? எடுத்துக்காட்டாக யோசேப்பை நினைத்துக்கொள்வோம்.
 1. ஞானம்: தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் மேலும் மேலும் அறியவேண்டும். நாம் தேவனுடைய வார்த்தையை தியானிக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்ட நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மகிமையை காண்கிறோம்.
 1. இச்சையடக்கம்: 1 கொரிந்தியர் 9:25ல் “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்” என கூறப்பட்டுள்ளது. இச்சையடக்கம் என்பது ஆவியின் கனியாகும். அழிந்துபோகும் கிரீடத்தைப் பெற நாம் எவ்வளவு ஒழுக்கமும் முயற்சியும் மேற்கொள்ளுகிறோம். அழியாத கிரீடத்தை பெறுகிறவர்களாகிய நாம் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாய் இருக்கக்கடவோம்.
 1. பொறுமை:துன்பங்களின் போது உறுதியாய், மனந்தளராமல் பொறுமையாய் இருக்க வேண்டும். ஆம் சில சமயங்களில், நாம் அதிகமாக துன்பத்தில் இருப்பதாக உணர்கிறோம்! ஆனால் அப்படியல்ல, அவர் நம்மை பலப்படுத்துவார். ரோமர் 8:38ன் படி “மரணமோ, ஜீவனோ, தேவதூதர்களோ, அதிபதிகளோ, நிகழ்காலங்களோ, வரப்போகும் காரியங்களோ, அதிகாரங்களோ தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறோம்”.
 1. தேவபக்தி: நம்மை அல்ல, தேவனையே பிரியப்படுத்த முயற்சி செய்வோம். சாமுவேலை சொன்னதுப் போல “கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறான்” என்று.
 1. சகோதரசிநேகம்: சகோதரரை நேசிக்கவும், மன்னிக்கவும் வேண்டும் என்கிற விருப்பம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.
 1. அன்பு: தேவனுக்கு கீழ்ப்படிவதின் மூலம் தேவனிடத்திலும், பிறனுடைய நலனை விரும்புவதின் மூலம் பிறனிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.

ஆவிக்குரிய வளர்ச்சியின் முடிவு:

2 பேதுரு 1:8-9ன் படி “இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்” என்று வாசிக்கிறோம். பயனுள்ள மற்றும் கனியுள்ள வாழ்க்கையா இல்லையெனில் பயனற்ற மற்றும் கனியற்ற வாழ்வா? சிந்திப்போம்.

கண்சொருகிப்போன குருடனுக்கு, மரமும் மனிதனும் ஒன்றுபோலவேத் தெரியும். அதுபோல, அப்படிபட்டவர்களுக்கு இவ்வுலக மற்றும் நித்திய வாழ்க்கைக்கு இடையிலான வித்தியாசங்களை வேறுபடுத்திப் பார்க்க தெரிவதில்லை.

அவர்கள் தங்களுடைய முந்தய பாவங்கள் கழுவப்பட்டதை மறந்து, தற்காலிகமான காரியங்களை மட்டுமே பார்ப்பார்கள். தேவன் நம்மை எத்தகைய சேற்றிலிருந்து மீட்டார் என்பதை அடிக்கடி நினைவுகூர்ந்தாலே நாம் எப்போதும் தாழ்மையாக இருப்போம்.

முடிவுரை

ஆடம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவமும் கவனமும் கொடுத்தால், இந்த குறுகிய உலக வாழ்க்கையில் நாம் அதிருப்தி மற்றும் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்போம். மாறாக நமது கிறிஸ்தவ வாழ்வின் நோக்கங்களில் கவனம் செலுத்துவோம். தேவகுமாரனின் தெய்வீக தன்மையை பெறுவதில் ஆர்வம் காட்டுவோம். இந்த கடைசி இலக்கை அடைய தேவன் நமக்கு எல்லா தேவைகளையும் தந்துள்ளார். அவர் தமது இரக்கம், மென்மை, பணிவு, நிபந்தனையற்ற அன்பு, மன்னிப்பு, இதயத்தில் அமைதி, ஆண்டவர் மீது நிலையான விசுவாசம், மற்றவர்களை ஊக்கப்படுத்துதல், பாரபட்சமற்ற தன்மை போன்ற பண்புகளை நமக்கு பகிர்ந்து கொடுக்க விரும்புகிறார். அவருடைய மகிமை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். முடிவை நாம் தான் எடுக்க வேண்டும். நமது ஊக்கமான முயற்சி இல்லாமல் அதை செயல்படுத்தமுடியாது. எபிரேயர் 3:14ல் “உங்கள் நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் நமக்கு சுதந்திரத்தையும் நல்மனசாட்சியையும் கொடுத்திருக்கிறார். அவர் நம்மை ஒருபோதும் வற்புறுத்துவதில்லை. இன்று நாம் என்னவாக இருக்கிறோம் என்பது நாம் கடந்தகாலங்களில் எடுத்த முடிவுகளின் பலன் தான். இப்போது நாம் எடுக்கும் முடிவுதான் நமது எதிர்காலத்தையும் நித்தியவாழ்வையும் தீர்மானிக்கப் போகிறது. ஒரே ஒரு வாழ்க்கை தான் நம்மிடம் இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய அழைப்பின் நம்பிக்கையைப் பற்றி கேள்விப்பட்டோம், அதாவது அவரது தெய்வீக மகிமையில் பங்குபெறுவது. ஆனால் நம் கவனம் இந்த உலகத்தின் தற்காலிக விஷயங்களைப் பற்றியே இருக்கிறது. வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பது போல் நமக்கு மீண்டும் மீண்டும் இந்த உலக வாழ்க்கை வாழ வாய்ப்பு இல்லை. உதாரணமாக ஒரு மருத்துவ பெற்றோர்கள் நல்ல மருத்துவமனை ஒன்றை கட்டி தங்கள் ஒரே மகனை பெங்களூரில் எம்.பி.பி.எஸ் படிக்க அனுப்பினார்கள். அனால் அந்த மகன் வழிதவறி நடந்து, அந்த படிப்பை முடிக்க முடியாமல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பினார். அப்பா மிகுந்த வேதனையுடன் இந்த வார்த்தைகளை கூறினார் “என்ன என்ன திட்டங்களும், ஆசைகளும் நாங்கள் உனக்காக வைத்திருந்தோம்! எல்லாவற்றையும் கெடுத்துவிட்டாயே!” என்று. நாம் அவருடைய முன்னிலையில் நிற்கும்போது நம் வாழ்க்கையில் அவருடைய ஆசைகளையும் திட்டங்களையும் நமக்குக் காண்பிப்பார். அப்போது வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை. 2 பேதுரு 1:10ல் “ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்” என்று கூறுகிறார். தேவனுடைய நித்திய ராஜ்ஜியத்திற்குள் ஆரவாரமான வரவேற்பு, பிரமாண்டமான நுழைவு வேண்டுமா அல்லது நாம் எப்படியாவது உள்ளே சென்றுவிட்டால் போதும் என்று நினைக்கிறோமா! என் வாழ்க்கையைப் பற்றிய உமது நோக்கத்தை அடைய எனக்கு உதவும் என்று தேவனிடம் வேண்டுவோம். ஒவ்வொரு நாளும், அந்த தெய்வீக நோக்கத்திற்க்கு நேராக செல்லும் ஒரு படிக்கட்டு என்று எண்ணி பயணிப்போம். தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

மொழிபெயர்த்தவர்,

பொன்சிபா. வி