உங்களில் உள்ள பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்

House of Prayer
Mar 22 · 1 minute read

ஜெய் தரன்

புதிய ஏற்பாட்டின் ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் ஒரு வசனத்தில் சுருக்கினால், நான் நினைக்கிறேன் அதை நாம் எபேசியர் 4:30-இல் வாசிக்கலாம். அதென்னவெனில், “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்”. நேர்மறையாக சொன்னால் நாம் பரிசுத்த ஆவியானவரை மதிப்புக்குரியவராகவும், கனத்துக்குரியவராகவும் எண்ண அழைக்கப்பட்டிருக்கிறோம். அதின்மூலமாக நாம் அவரை துக்கப்படுத்தாமல் வாழலாம். நாம் இந்த கொள்கையுடன் வாழ்ந்தால் மட்டுமே உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கையை வாழமுடியும். இந்த வசனத்தை நாம் விரிவாக தியானிப்போம். 

I. பரிசுத்த ஆவியானவரின் அன்பை தெரிந்துக்கொள் (வ.30)

நம்முடைய கிறிஸ்தவ சபைகளில் விசுவாசிகள் மத்தியில், பிதாவானவரின் அன்பை குறித்து அடிக்கடி பேசுகிறோம். அவர் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்கு பலியாக தந்ததையும், இயேசு நம்மேல் வைத்திருக்கும் அன்பையும், நமக்கு பதிலாக மனப்பூர்வமாய் மரித்ததையும் குறித்து பேசுகிறோம். ஆனால் நாம் பல நேரங்களில் பரிசுத்த ஆவியானவரின் அன்பை நினைப்பதில்லை. இந்த வசனத்தை நாம் ஒரு கட்டளையாக பார்த்தாலும், இது ஆவியானவருக்கும் நமக்கும் உள்ள உறவின் தன்மையையும் நினைப்பூட்டுகிறது. இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள “துக்கம்” என்ற வார்த்தை, ஒருவரை வருத்தமடையப்பண்ணுவதை குறிக்கிறது. ஆனாலும் நீ உன்னை நேசிக்கிற ஒருவரைத் தான் துக்கப்படுத்தமுடியும். நாம் பாவம் பண்ணும்போது அவர் துக்கப்படுகிறார் என்பதினால் அவர் நம்மை நேசிக்கிறார் என்று விளங்குகிறது. இந்த ஆவியானவரின் அன்பை நீ அறிந்திருக்கிறாயா?

இதை இன்னும் புரிந்து கொள்ள, வேதத்தின்படி ஆவியானவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை பார்ப்போம். ஆவியானவரே உன்னை புதிதாக்கி மறுபடியும் பிறக்கப்பண்ணுகிறவர் (யோவா.3:5; 1 கொரி.12:3; தீத். 3:5), நீ கர்த்தரின் பிள்ளை என்று உறுதி அளிப்பவர் (கலா. 4:6; ரோ. 5:5, 8::15-16), உனக்காக வேண்டுதல்செய்பவர்(ரோமர்.8:26), உன்னை வழிகாட்டி நடத்துகிறவர் (ரோ. 8:14; யோவான் 16:13; அப்போஸ்தலர் 16:6), உன்னை பரிசுத்தப்படுத்தி பிதா மற்றும் குமரனின் நாம மகிமைக்காக கனிகொடுக்க செய்பவர் (2 கொரி.3:18; 1 தெச. 4:7-8; யோவான்.16:14) மற்றும் கிறிஸ்துவின் வருகையிலே உன் சரீரத்தை உயிரோடே எழும்பப்பண்ணுகிறவர் (ரோமர்.8:11). அவரே நம்முடைய நித்திய ஜீவனுக்கு பாதுகாப்பும் உத்திரவாதியுமாய் இருக்கிறார் (எபே. 1:13-14,4:30). மேலும் பவுல் எழுதும்போது, கர்த்தர் நம்மை பரிசுத்த ஆவியினால் முத்திரையிட்டிருக்கிறார் என்கிறார். ஆவியினால் முத்திரையிட்டிருக்கிறார் என்பது கர்த்தர் நம்மேல் வைத்துள்ள உரிமையையும், அடையாளத்தையும் பாதுகாப்பையும் குறிக்கிறது. அந்த அன்பிற்கு ஈடாக அவரை துக்கப்படுத்தாதிருப்பது நம்முடைய பொறுப்பு ஆகும். நாம் அவரை கனத்திற்குரியவராக எண்ணினால் மட்டுமே அவருடைய கட்டளைகளை கைக்கொள்ள கவனமாய் இருப்போம். அதற்கு முதலில் நாம் ஆவியானவரின் அன்பை அறிந்து கொள்வது அவசியம். அவருடைய அன்பை அறிந்துகொள்ளும்போது நாம் ஆவியானவரை துக்கப்படுத்தாமல் கனப்படுத்தி வாழமுடியும்.

II. சகலவிதமான பாவங்களை விட்டு நீங்குங்கள் (வ.31)

அடுத்த வசனத்திலேயே, பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாமல் இருக்க நாம் தவிர்க்க வேண்டிய ஆறு தீமைகளை பவுல் குறிப்பிடுகிறார். வசனத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் “சகல” மற்றும் “எந்தவித” வார்த்தைகளை பயன்படுத்துவதின் மூலம் சிறிதளவு கூட நமக்குள் கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், துர்க்குணமும் இருக்கலாகாது என்பதை உறுதிப்படுத்துகிறார். எந்த விதத்திலும் நாம் இவைகளை செய்வதை நியாயப்படுத்தக்கூடாது. ஏனெனில் இவைகள் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தும். உண்மையாக சொல்லப்ப்போனால் ஆவியினால் நடத்தப்படாதவர்களுக்கு இயல்பாகவே இந்த குணங்கள் இருக்கும். நீங்களோ மீட்கப்பட்டு, ஆவியானவர் உங்களில் வாசமாயிருப்பதால், நான் ஒரு சாதாரண மனுஷன் என்று எண்ணாமல் இந்த பாவங்களை விட்டுவிடுங்கள். அவைகள் உள்ளான இருதயத்திலும், புறம்பான வாயின் வார்த்தைகளிலுமிருந்து நீங்கக்கடவது. ஏனெனில் இவை இரண்டும் ஆவியானவரை துக்கப்படுத்தும்.

இந்த ஆறு காரியங்களை விரிவாகப் பார்ப்போம்    

சகலவிதமான கசப்பும் நீங்கக்கடவது

கசப்பு என்பது ஒப்புரவாக விரும்பாத நீண்டகால வெறுப்பை குறிக்கும். கிரேக்க மொழியில் இதன் மூலவார்த்தை அம்புகளை விவரிக்க பயன்படுத்தும் “கூரான அல்லது கூர்மையான” என்பதை குறிக்கும். இதே கிரேக்க மூலவார்த்தையில் இருந்து தான் “பிக்ரிக் அமிலம்” என்ற வெடிபொருளின் பெயர் வந்தது. உருவகமாக சொன்னால், அது உண்மையான அல்லது உணரப்பட்ட வலிகளை தொடர்ந்து நினைத்து அதோடு கோபத்தை ஊட்டுகிற தன்மையை குறிக்கிறது. கசப்பு என்பது இரக்கம், நல்லெண்ணம் என்பவைகளின் எதிரானவை. எனவே இந்த மன்னிக்காத விரும்பாத கசப்பின் ஆவி பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தும் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் நம்முடைய இருதயத்தை கேட்டுப்பார்ப்போம்: யாரிடமாவது கசப்போ வெறுப்போ கொண்டிருக்கின்றோமோ? பிரியமான சபையே, கசப்புகள் ஆவியானவரை துக்கப்படுத்தும் என்பதை உணர்ந்து அவைகளை நம்மிடத்திலிருந்து விலக்குவோம்.

சகலவிதமான மூர்க்கம், கோபம், கூக்குரலும் நீங்கக்கடவது

இங்கே மூர்க்கம் என்பது இடைவிடாமல் வெளிப்படும் ஒரு கிளர்ச்சியான கடுங்கோபத்தைக் குறிக்கிறது. அது முழு ஆவியின் கொந்தளிப்பாய், முழுமனிதனையும் கைப்பற்றி நடத்துகிற ஒரு வலிமையான உணர்ச்சியைப் போல் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், கோபம் என்பது விரைவாக எரிந்து விரைவாக அணைந்துவிடும் ஒரு ஆத்திரம். கிரேக்கர்கள் அதை வைக்கோலில் பட்ட நெருப்புக்கு ஒப்பிட்டனர், விரைவாக எரிந்து விரைவாக அணைந்துவிடும். லூக்கா 4-ஆம் அதிகாரத்தில், நாசரேத்தின் யூதர்கள் இயேசுவை மலையின் மேலிருந்து தள்ளிவிட நினைத்தபோது அவர்களுக்கிருந்த மூர்க்கத்தை லூக்கா குறிப்பிடுவதை காணலாம். இதுபோல லூக்கா மீண்டும் அப்போஸ்தலர் 19 ஆம் அதிகாரத்தில், பவுல் தங்கள் விக்கிரகங்கள் கடவுள்கள் அல்ல என்று பிரசிங்ததற்கு எதிராக எபேசியரின் மூர்க்கத்தை விவரிக்கிறார். இது மோசேக்கு எதிரான பார்வோனின் கோபத்தை விவரிக்க எபிரேயரின் ஆசிரியரால் அதிகாரம் 11:27 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எல்லா சூழ்நிலைகளிலும் கொலைசெய்வதற்கு ஏதுவான மூர்க்கத்தை காணலாம்.

மறுபுறம் கோபம் என்பது நமக்குள் குடியேறி தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் ஒரு நுணுக்கமான வெறுப்பை குறிக்கிறது. அது திடீரென்று ஏற்படும் வெளிப்பாடு அல்ல, மாறாக ஒருவர் மேல் நீண்டகாலமாக பழக்கப்பட்ட கோபமாகும். இதன் மூல வார்த்தைத்தான், ஆண்டவர் பாவத்தை வெறுக்கிறவர் என்பதை விளக்க பயன்படுத்தப்படுகிறது. மூலமொழியில் கடவுளின் கடுங்கோபத்தை குறிப்பதும் இதே வார்த்தைத்தான். யாக்கோபு 1:19 -யில் கட்டளையிட்டிருக்கிறதுபடி, கோபிக்கிறதற்குத் தாமதமாயிருங்கள் என்பதினால் இந்த வார்த்தை பாவத்திற்கேதுவான கோபத்தையும் குறிக்கும். 

இறுதியாக, கூக்குரல் என்பது மற்றவர்களிடம் சண்டையும் சச்சரவும் செய்து, சத்தத்தை உயர்த்துவதின் மூலம் உங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதாகும். ஆகவே கர்த்தர், நம்மிடம் உள்ள கோபமாகிய பழக்கப்பட்ட வெறுப்பு, வெடிக்கும் தன்மையுடைய கோபமான மூர்க்கம் மற்றும் கோபத்தின் புறவெளிப்பாடாகிய கூக்குரல் ஆகிய இவைகள் ஆவியானவரை துக்கப்படுத்தும் என்பதினால் இவைகளை களையும்படி கூறுகிறார்.

நாம் வீட்டில் இருக்கும்போது பெரும்பாலும் கோபத்தை வெளிப்படுத்துகிறோம், ஏனென்றால் நம் குடும்பத்தினர் அதைப் பொறுத்துக்கொள்வார்கள். அன்பான சகோதர சகோதரிகளே, இந்த தீமைகளை நம் வீட்டில் முதலில் விலக்குகிறோமா? நம்முடைய கோபம் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறோமா?

சகலவிதமான தூஷணமும், துர்குணமும் நீங்கக்கடவது

எல்லா தூஷணங்களும் உண்மையில் “நிந்தனை” அல்லது அவதூறான பேச்சாகும். இத்தகைய பேச்சு மற்றவரை கேவலப்படுத்தி இழிவுபடுத்துகிறதற்கு ஏதுவான தீங்காயிருக்கிறது. இப்படிப்பட்ட அனைத்துப் பேச்சுகளின் நோக்கமும் பிறரை புண்படுத்தி, நற்பெயரை கெடுத்து, ஒருவரின் குணத்தை இழிவுபடுத்தி அவர்களைக் குறைத்து மதிப்பிடுவாதாகும். இப்போதும் “தூஷணம்” ஒருவரை நேரடியாகவும் தாக்கலாம் அல்லது வதந்திகள் மூலம் மறைமுகமாகவும் தாக்கலாம். வதந்தி எனபது ஒருவருடைய நற்பெயரை மறைமுகமாக தாக்கி, அவர்களைப்பற்றி தீங்கான தகவல்களை பரப்பும் தூஷணமாகும். ஒரு பியூரிடன் இவ்வாறு கூறினார், “உங்களிடம் ஒருவரைப் பற்றி நல்லது சொல்ல எதுவும் இல்லையென்றால் அவரை பற்றி ஒன்றும் பேசாதீர்கள்” என்று. ஆகவே எல்லா தூஷணைகளையும், அவதூறான எல்லா பேச்சுகளையும் விட்டுவிடுங்கள். 

மேற்கண்ட எல்லா தீமைகளுடன், அனைத்துக்கும் வேராகிய துர்க்குணத்தையும் விட்டுவிடுங்கள். “துர்க்குணம்” என்பது பிறரை காயப்படுத்த வேண்டும் என்கிற தீய மனப்பான்மையைக் குறிக்கிறது. நீங்கள் வேண்டுமென்றே மற்றவர்களைக் காயப்படுத்த முற்படும்போது, நீங்கள் அவர்களுக்கு தீங்கிழைக்கிறீர்கள். அதன் சாரம், மறுபடிப்பிறவாமலும் மற்றும் மாம்சத்தில் வாழ்வதும் போன்றதாகும். 1 கொரி. 5:7-8 இல் நாம் பார்க்கும்போது” துர்குணம்” மற்றும் “பொல்லாப்பு” பழைய புளித்த மாவை குறிக்கிறது. 

இப்போதும் மாம்சத்தின் சாக்கடையைக் குறிக்கும் இந்தத் தீமைகளையெல்லாம் என்ன செய்வது? அவைகளை நீக்கி போடுவது அல்லது அகற்றுவது என்பது தான் கட்டளை. இந்த கட்டளைக்கு ஆவியின் வல்லமையால் நாம் இணங்கவேண்டும் என்பதே விருப்பமான அம்சமாகும். நாம் “ஆண்டவரே அதை நீக்கும் “என்று ஜெபம் பண்ணும்படி கட்டளை பெறவில்லை. மாறாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு, கடவுளின் கிரியைக்குஏற்ப நடந்துக்கொள்ளுங்கள். இந்த வசனத்தின் அர்த்தம் “தள்ளிவிடுங்கள்” அல்லது “அகற்றுங்கள்” என்று கூறுவதால் இதில் ஒரு அவசர தன்மையை பார்க்கலாம். இந்த தீமைகளுடன் எந்த தொடர்பும் இல்லாதபடி அவைகளை உடனடியாக விட்டுவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் அவருடைய அன்பை உணர்ந்து அவரது ஐக்கியத்திற்கு மதிப்பளிக்கவும் அறிந்துள்ளீர்கள்.

III. ஒருவருக்கொருவர் அன்பில் நடவுங்கள் (வ.32)

மேற்கூறிய தீமைகள் இருக்கும் இடத்தில், நீங்கள் புதிய மனிதனை தரித்துக்கொள்வதன் மூலம் ஆவியானவரைப் பிரியப்படுத்த முடியும். எபேசியர் 5:2ல் பவுல் கூறும்வண்ணமாக நாமும் அன்பில் நடந்துகொள்வோம்.

முதலில், நாம் ஒருவருக்கொருவர் இரக்கமாய் இருக்க வேண்டும். இரக்கமாக இருப்பது என்பது மென்மையான, எளிதில் உபசரிக்கும் மற்றும் உதவும் மனப்பானன்மையாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் பிறருடைய நலன் மற்றும் நன்மையை விரும்பும் ஒரு நல்மனம் உடையவர்களாய் இருப்பீர்கள். இதுவே உங்கள் பேச்சையும் செயல்களையும் வகைப்படுத்தும். இதை சில சமயங்களில் “நன்மை” என்றும் கூறலாம். மனதின் இந்த மனப்பான்மை ஆவியானவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சபையில் உங்களைப்பற்றி, இவர் இரக்கக்குணம் கொண்டவர், இவர் வார்த்தைகளும் செயலும் மற்றவர் நலனை நோக்கினது என்றும் சொல்வார்களா?

இரண்டாவதாக, நாம் ஒருவருக்கொருவர் கனிவான இதயத்துடன் பழக வேண்டும்: அவிசுவாசிகளைப் போல் கடின இதயம் கொண்டவர்களாய் (எபேசியர் 4:18) இல்லாமல், விசுவாசிகள் போல மென்மையான இதயம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும். இது மற்றவர்களுக்கு உதவ விரும்பும் ஒரு விருப்பமாக மட்டுமல்லாமல் இதை பற்றிய பேச்சும் செயல்களுக்குப் பின்னால் இரக்கமும் அக்கறையுமுள்ள இதயமும் இருக்க வேண்டும். இதன் பொருள் “இரக்கமுள்ளவராக இருப்பது அல்லது எளிதாகவோ விரைவாகவோ அன்பும் இரக்கமும் காட்டுபவர்” என்பதாகும். இவ்வாறு நாம் கிறிஸ்துவுக்குள், மற்றவர்களிடம் மென்மையான உணர்வுகளைக் கொண்டிருக்க அழைக்கப்படுகிறோம். சபையில் உங்கள் இருதயம் மற்றவர்களை கனிவாக நோக்குகிறதா? நீங்கள் மற்றவர்களுடனான உங்கள் உறவில் ஆழ்ந்த அக்கறை, புரிதல், உணர்வுதிறன் மற்றும் இரக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? கனிவான உள்ளம் கொண்டவர்களாக இருப்பதற்கு தேவன் நம்மை அழைக்கிறார்.

மூன்றாவதாக, அவர் நம்மை ஒருவரையொருவர் மன்னிக்கும்படி அழைக்கிறார். குறிப்பாக மற்றவர்கள் நமக்கு விரோதமாக செயல்படும்போது நாம் ஒருவருக்கொருவர் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மற்றவர் குற்றங்களை நாம் மன்னித்து எந்தவித கசப்புகளை இருதயத்தில் சிறிதளவும் வைக்காமல் விலக்கவேண்டும். இதுவே ஆவியானவரை பிரியப்படுத்தும். இந்த ஒரு மன்னிக்கும் தன்மைக்கு உந்துதலே, தேவன் கிறிஸ்து இயேசுவுக்குள் நம் பாவங்களை மன்னிக்கும் சுவிசேஷம். இந்த வசனத்தில் மன்னிப்பின் காலத்தை கவனித்தால் கடந்த காலத்தை குறிக்கிறது. ஆகவே தேவன் நம்முடைய சகல பாவங்களையும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஏற்கனவே மன்னித்திருக்கிறார். நாமும் இவ்வாறு மற்றவர்களின் சகல பாவங்களையும் மன்னிக்கிறோமா? நாம் நியாயத்தீர்ப்புக்கு பாத்திரமாயிருந்தும் தேவன் நம்மை இந்த அளவிற்கு மன்னித்திருக்கிறாரே. நாமும் இவ்வாறு தகுதியில்லாதவர்களுக்கும் மன்னிப்பை அளிக்கிறோமோ? இந்த மன்னிப்பை கவனித்தால், தேவன் அதை நமக்கு பதிலாக தம் சொந்த குமாரனை சிலுவையில் விலைக்கிரயமாக மரிக்க செய்து நிறைவேற்றினார். நாமும் சுய மரியாதைகளுக்கு செத்து மற்றவர்களை மன்னிக்கிறோமா?

இதினால், பவுல் நம்மை, ”இதை செய்யுங்கள், இதை செய்யாதேயுங்கள்“ என்பது போன்ற அறநெறிகள் கொண்ட வாழ்க்கைக்கு அழைக்கவுமில்லை, பயம், அச்சுறுத்தல் மற்றும் குற்றவுணர்ச்சிக்கு ஏதுவான சட்டத்திட்டங்கள் கொண்ட வாழ்க்கைக்கும் அழைக்கவில்லை. மாறாக சுவிசேஷம் நமக்கு இலவசமும் விலையேறப்பெற்றதுமான தேவனின் கிருபையையும் அன்பையும் வெளிப்படுத்தி அதின்மூலம் கீழ்ப்படிதலுக்கு நம்மை அழைக்கிறது. பேதுரு சொல்லும்போது, நாங்கள் கர்த்தரின் தயையை ருசிபார்த்தத்தினால் நாங்களும் தயை உள்ளவர்களாயிருக்கிறோம் (1 பேதுரு 2:1). யாக்கோபு: 5:11 – யில், கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராய் இருக்கிறது போல நாங்களும் இரக்கமுள்ள இருதயத்தை உடையவர்களாயிருக்கிறோம். எபேசியர்: 4:32 – யில் பவுல் எழுதும்போது, தேவன் எங்களிடத்தில் இரக்கமும் மன்னிக்கிறவருமாயிருக்கிறதால்.  நாங்கழும் மற்றவர்களுக்கு மன்னிக்கிறோம். நாங்கள் தேவனுடைய கிருபையை ருசிப்பார்த்தவர்களானதால் மற்றவர்களுக்கும் அதே கிருபையை அளிக்கிறோம். அவருடைய அன்பு நம்மை கிருபையின் மக்களாக்குகிறது.

முடிவுரை

நாம் இப்போது முழு வட்டத்திற்கு வந்துள்ளோம். பரிசுத்தமான வாழ்வை அடைவதற்கு ஆவியானவரின் அன்பை அறிவதே முதன்மை என தொடங்கினோம். அதே ஆண்டவரின் அன்பை அறிவதே அடிப்படை என்றும் ஒருவருக்கொருவர் உள்ள உறவில் நாம் உதாரணமாக கடைபிடிக்கவும், பின்பற்றவும் வேண்டியவைகளை அறிந்து முடிக்கிறோம். நமது திரியேக தேவன் நம்மை மிகவும் அதிகமாக நேசித்திருக்கிறார். நற்செய்தியின் வெளிச்சத்தில், நம் ஆண்டவர் நமக்காக பெற்ற அவருடனான இந்த ஐக்கியத்தை போற்றுவோம். அன்பான சபையே, உங்களில் வாசமாயிருக்கும் விலைமதிப்பில்லாத ஆவியானவரை நாம் கனப்படுத்தி அவருக்கு பிரியமுண்டாக வாழ்வோம். ஒருவரோடொருவர் உள்ள எல்லா உறவுகளிலும் அவரை துக்கப்படுத்தாமல் இருப்பதே நம் நோக்கமாயிருக்கட்டும். நாம் எல்லா கசப்பு, கோபம், மூர்க்கம், கூக்குரல், தூஷணம், துர்குணம், முதலான தீமைகளை நீக்கிவிட்டு அன்பில் நடக்கவும், இரக்கமும் கனிந்த உள்ளத்துடன், ஒருவருக்கொருவர் மன்னிப்பவராகவும் இருக்கக்கடவோம். ஏனென்றால் தேவன், இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மேல் இரக்கமுள்ளவராக இருந்திருக்கிறார். எனவே, நாம் அனைவரும் நம் சபையில் ஒருவருக்கொருவர் உள்ள உறவை மதிப்பாய்வு செய்வோம். எங்கெல்லாம் மன்னிப்பு கொடுக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் ஒருவரையொருவர் மன்னித்து கசப்பைக் நீக்கிவிடுவோம். எங்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டுமோ அங்கெல்லாம் அதை கேட்போம். நாம் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள ஐக்கியத்தில், பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாமல் இருக்க ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்யும் என்று தினமும் ஜெபிப்பதை வழக்கமாக கொள்வோம். அப்படி செய்வதில் தேவன் பிரியப்படுவராக, ஆமேன்.

yt subscribe
House of Prayer, Trivandrum
2.08K subscribers
Subscribe

Related Articles

Subscribe to our newsletter